ஒரு வாரம் சுற்றுப் பயணம் பிரதமர் மோடி 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார் : 27ல் ஐநா.வில் உரை

ஹூஸ்டன்: பிரதமர் மோடி ஒரு வார பயணமாக வரும் 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார். பிரதமர் மோடி வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நியூயார்க் நகருக்கு செல்லும் அவர், பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, 27ம் தேதி ஐநா பொதுச் சபையில்  உரையாற்றுகிறார். 2வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு ஐநா சபையில் மோடி முதல் முறையாக உரையாற்ற உள்ளார். அதே நாளில், மோடியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐநா சபையில் உரையாற்ற உள்ளார். ஒருவார கால சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‘ஹவ்டி மோடி’ என்ற வரவேற்பு நிகழ்ச்சியில், இந்திய அமெரிக்க முஸ்லிம் அமைப்பும் முக்கிய பங்காற்றுகிறது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் லடாபத் ஹூசேன் கூறுகையில், ‘‘நம் ஒவ்வொருவரின் நம்பிக்கைகள், யோசனைகள், நடைமுறைகளுடன் மற்றவர்களுடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால், இணக்கமான, நட்பான சூழலில் கலந்துரையாடாவிட்டால் எங்களின் கருத்துக்களை அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது. வாரணாசியில் வளர்ந்தவனான நான், ஒரு இந்தியனாகவும், முஸ்லீமாகவும் பெருமை கொள்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட எனது தாய்நாட்டின் தலைவரை வரவேற்க கடமைப்பட்டுள்ளேன்,’’ என்றார்.

Related Stories: