ஹராரேவில் உள்ள வீரர்கள் நினைவிடத்தில் முகாபே உடலை அடக்கம் செய்ய முடிவு

ஹராரே: ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேயின் உடலை ஹராரேவில் உள்ள வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்ய அவருடைய குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர். ஜிம்பாப்பே நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு வரை தொடர்ந்து 37 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ராபர்ட் முகாபே. கடந்த 2017ம் ஆண்டில் இவரது அரசு கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து இவரது சகாப்தம் முடிவுக்கு வந்தது.  பிரபலமான அரசியல்வாதியான இவர், வயது மூப்பு நோய் காரணமாக கடந்த வாரம் சிங்கப்பூரில் காலமானார்.

அவருக்கு 95 வயது. இவரது உடல் ஜிம்பாப்பேயில் உள்ள ஹராரே நகரில் இன்று அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது. இந்நிலையில், இந்நாட்டின் தற்போதைய அதிபர் எமர்சன் நங்கக்வா,  முகாபேயின் உடலை ஹராரேயில் உள்ள வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படும் என அறிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முகாபேயின் குடும்பத்தினர், ‘அவரது அடக்கம் தனியார் நிகழ்ச்சியாக நடத்தப்படும். அரசு நிகழ்ச்சியாக நடத்த அனுமதிக்க மாட்டோம். முகாபேவின் சொந்த ஊரான குடாமாவில் தான் உடல் அடக்கம் செய்யப்படும்,’ என தெரிவித்தனர்.

அரசு நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து, முகாபேயின் உடலை வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர். முகாபேயின் இறுதி சடங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங், கியூபாவின் பிரபல தலைவர் ரால் கேஸ்ட்ரோ, மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கிறார்கள்.

Related Stories: