முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய எவ்வித தகுதியுமில்லை: துரைமுருகன் ஆவேசம்

சென்னை: திமுக ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்விதத் தகுதியுமில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘‘நீர்மேலாண்மைக்கு திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன?” என்று முதலமைச்சர் சேலத்தில் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் வகிக்கும் துறையில், அவருக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத ஒரு முதலமைச்சரை, பொதுப்பணித்துறை தனது அமைச்சராகப் பெற்றிருப்பது கண்டு தமிழக மக்கள் வெட்கமும் வேதனையும் கொள்கிறார்கள். நீர்மேலாண்மைத் திட்டங்கள்- நதி நீர்த்திட்டங்கள்- நீர்த்தேக்கத் திட்டங்கள் என்று தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி சிறிதும் இல்லாமல், ‘கமிஷன் கலாச்சாரத்தில்’ முழுக்க முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கும் எடப்பாடி முதலமைச்சராக அமைந்தது தமிழகத்திற்குக் கெட்ட வாய்ப்பாகும்.

Advertising
Advertising

1967 முதல் 2011 வரை 41க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டி, தமிழகத்தின் நீர்மேலாண்மைக்கு மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கியது கலைஞர் முதலமைச்சராகவும், நான் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த திமுக ஆட்சி என்பதை முதலமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். நதி நீர் இணைப்புத் திட்டங்களின் முன்னோடி திமுக ஆட்சிதான். 2006 முதல் 2011 வரை 62,349 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று, அதன் மூலம் 2,35,464 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்கியது திமுக அரசு. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சிபுரம் வரையிலும் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் துணை முதலமைச்சரும் எங்கள் தலைவர் ஆகியோரின் ஆட்சியின் சாதனைகளுக்கான சாட்சி. “தி.மு.க. ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்கள்” என்று எங்கள் தலைவரைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, 5.42 லட்சம் கோடி முதலீடு வரப்போகிறது என்று ‘பகட்டு’ அறிவிப்பை வெளியிட்டு - இப்போது 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ள பழனிசாமிதான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

“ஸ்டாலின் வெளிநாடு போய் பெற்ற முதலீடுகள் எவ்வளவு” என்று கேள்வி கேட்கிறார். எங்கள் தலைவர் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் வெளிநாட்டிற்கு முதலீடு பெறப் போகவில்லை என்ற அடிப்படை கூட அவருக்கு தெரியவில்லை என்பது பரிதாபத்திற்கு உரியது.   “மாநிலத்திற்குள் ஓடும் நதிகளை இணைப்பது” “காவிரி டெல்டா கால்வாய்களைத் தூர் வாருவது” “ஏரி குளங்களைத் தூர் வாருவது” “முதலீடுகளைப் பெறுவது” “தொழிற்சாலைகளை அமைப்பது” உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்திருக்கும் அதிமுக ஆட்சியின் தற்போதையை முதலமைச்சராக இருக்கும் பழனிசாமிக்கு, தி.மு.க. ஆட்சி பற்றியோ,

முதலமைச்சராக இருந்த கலைஞர் பற்றியோ, ஏன், மேயர் முதல் துணை முதலமைச்சர் வரையிலான பொறுப்புகளை வகித்து நேர்மையான, திறமைமிக்க எல்லோரும் பாராட்டிய நிர்வாகம் அளித்த எங்கள் தலைவர் பற்றியோ, வெற்றிகரமாகத் திட்டங்களை நிறைவேற்றிய எங்கள் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தோ அரைகுறையான கேள்வி எழுப்பி, எதிர்மறை விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை, எந்த அருகதையுமில்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: