இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்புள்ளது: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி

ஜெனிவா: இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெறுவதற்கான அரசியலமைப்பின் 370வது பிரிவின் விதிகளை இந்தியா ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்ய, பாகிஸ்தான் கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக, இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட குரேஷி, கூட்டத்தின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் ஜம்மு-காஷ்மீரை முன்வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எதிர்பாராத விதமாக போர் மூண்டுவிட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆதலால் போர் நடைபெற்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பாகிஸ்தானும் இந்தியாவும் புரிந்துகொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். ஆனால், காஷ்மீரில் இதே நிலைமை தொடர்ந்தால், பின்னர் எதுவும் நடக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் மிசெல் பேச்லெட்டை சந்தித்து இந்தியா மற்றுதம் பாகிஸ்தான் கட்டுப்பாடுகளின் கீழ் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து உண்மை நிலவரத்தை பார்வையிட்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தமது அழைப்பை ஏற்று இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து நிலவரத்தை பார்வையிட மிசெல் பேச்லெட்டும் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும் குரேஷி குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான போராட்டத்தில் காஷ்மீர் மக்கள் தனியாக இல்லை, பாகிஸ்தான் தங்களது காஷ்மீர் சகோதரர்களுக்கு தார்மீக, அரசியல் மற்றும் ராஜதந்திர ஆதரவைத் தொடர்ந்து அளிக்கும், என்று குரேஷி தெரிவித்துள்ளார்.

Related Stories: