மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைப்பதை தவிர்க்க அதிமுகவினருக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வேண்டுகோள்; பாமக, அமமுகவும் தடை

சென்னை: மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைப்பதை தவிர்க்க அதிமுகவினருக்கு அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி மற்றும் தனிநபர் இல்ல நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கக்கூடாது என்ற அறிவுரையை கட்சியினர் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் அதிமுகவினர் ஈடுபட கூடாது என்றும், அறியாமையால் சிலர் செய்யும் செயலால், மக்கள் பாதிக்கப்படுவதால் மனவேதனை அடைகிறோம் என்று தெரிவித்துள்ளனர். தலைமையின் அறிவுறுத்தலை கட்சியினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - பேனருக்கு தடை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பேனர் வைக்க அனுமதிக்கப்படமாட்டாது என்று முத்தரசன் அறிவித்துள்ளார். பேனர் கலாச்சாரத்தால் வெளிநாடு செல்ல இருந்த தனது ஒரே மகளை இழந்துவிட்டதாக சுபஸ்ரீயின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார். சுபஸ்ரீ தந்தையின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில் பேனர்கள் வைக்கப்படக்கூடாது என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

பேனருக்கு பாமகவும் தடை

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

பேனர்கள் வைக்க வேண்டாம் - டிடிவி தினகரன்

அமமுக கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் சாலை மையத்திலும் நடைபாதை ஓரத்திலும் பதாகைகள் வைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். ஈடுசெய்ய முடியாத உயிரிழப்புகள் இனி ஒருபோதும் நடக்காதபடி அனைவரும் பொறுப்போடும் சமூக அக்கறையோடும் செயல்பட டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுக கொடிகள் அகற்றம்

இன்று உணவு திருவிழாவிற்கு சென்ற முதல்வரை வரவேற்க அதிமுக கொடிகள் கடற்கரை சாலையில் கட்டப்பட்டிருந்தன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலை தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

Related Stories: