இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விட மந்த நிலையில் உள்ளது: சர்வதேச நாணய நிதியம்(ஐ.எம்.எஃப்) கருத்து

வாஷிங்டன்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விட மந்த நிலையில் உள்ளதாக ஐ.எம்.எஃப் கருத்து தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலையை அடைந்து 5 சதவிகிதமாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக இருந்தது. இதற்கு முன்னர் 2012 மற்றும் 2013ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9 சதவிகிதமாக இருந்ததே மிகவும் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும். உற்பத்தி துறையிலும், வேளாண் துறையிலும் ஏற்பட்ட சரிவே, சமீபத்திய மந்த நிலைக்கு காரணம் என மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்துறை கூறியிருந்தது. இந்நிலையில், சமீபத்திய இந்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருப்பதாக ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

புதிய புள்ளிவிவரங்கள் இனி வரப்பெறும் என்றாலும், சமீபத்திய மந்தநிலைக்கு என்ன காரணம் என்பதையும் ஐ.எம்.எஃப் விளக்கியுள்ளது. இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.எம்.எஃப் செய்தித்தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ், நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஒழுங்குமுறை விதிகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, வங்கியல்லாத சில நிதி நிறுவனங்களில் நீடிக்கும் பலவீன நிலைமை காரணமாகவே எதிர்பார்த்ததை விட இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பாதாக கூறியுள்ளார். நடப்பு நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவிகிதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.5 சதவிகிதமாகவும் இருக்கும் என முன்னர் ஐ.எம்.எஃப் கணித்திருந்தது. ஆனால், உள்நாட்டு தேவை எதிர்பார்த்ததை விட பலவீனமாக தோன்றுவதால் இந்த இரு நிதியாண்டுகளுக்குமான பொருளாதார வளர்ச்சி விகித முன்கணிப்பை 0.3 சதவிகிதம் அளவுக்கு ஐ.எம்.எஃப் குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.2 சதவிகிதமாகவும் இருக்கும் என  ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.  

Related Stories: