வரும் 26ம் தேதி முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் வங்கி யூனியன் எச்சரிக்கை

புதுடெல்லி: வங்கி இணைப்பை கைவிடாவிட்டால், வரும் 26ம் தேதியில் இருந்து 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக 4 வங்கி யூனியன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளுடன் சில பொதுத்துறை வங்கிகள் ஏற்கெனவே இணைக்கப்பட்டன. இந்நிலையில் 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 பெரிய வங்கிகளாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்க வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள்  கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ், வங்கி அதிகாரிகள் தேசிய தேசிய அமைப்பு ஆகியவை கூட்டாக வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதில் வங்கிகள்  இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 26ம் தேதி முதல் 2 நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து வங்கி யூனியன் தலைவர் ஒருவர் கூறுகையில்,  ‘‘வாரத்தில் 5 நாட்கள் வேலை, பண பரிவர்த்தனை சேவை நேரத்தை குறைத்து வேலை நேரத்தை ஒழுங்குமுறை படுத்துதல், வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் இணைந்து, வரும் நவம்பர் 2வது வாரத்தில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு  செய்துள்ளோம் என்றார்.

Related Stories: