பட்டுக்கூட்டிற்கு விலை இல்லாததால் தொழிலை கைவிட்ட விவசாயிகள்

கோபி :  பட்டு விவசாயிகளுக்கு வழங்கி வந்த மானியத்தை தமிழக அரசு நிறுத்தியதாலும், பட்டுக்கூடு விலை சரிவாலும் நஷ்டமடைந்த 60 சதவீத விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலை கைவிட்டு வருகின்றனர்.  தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே முதலிடத்திலும் திருப்பூர் மாவட்டம் இரண்டாமிடத்திலும் இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 7 ஆயிரம் ஏக்கரில் மல்பெரி செடி பயிரிட்டு பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடு தர்மபுரி மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலம் கொள்ளேகால், ராம்நகரில் உள்ள விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செய்ய சராசரியாக ரூ.250 முதல் ரூ.300 வரை செலவாகும்.  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வரை ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.325 வரை விற்பனையான நிலையில் தற்போது அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தியை கைவிட்டு வருகின்றனர்.

 இதுகுறித்து தமிழக பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் சண்முகசுந்தரமூர்த்தி கூறியதாவது: கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஏற்கெனவே உற்பத்தி செலவு அதிகரிப்பு, கூலிஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகளை, சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும்போது போக்குவரத்து செலவு போன்ற காரணங்களால் கடுமையான இழப்பு ஏற்பட்டு வருகிறது.

 கடந்த ஆண்டுக்கு முன்பு வரை ஒரு கிலோ பட்டுக்கூடு உற்பத்திக்கு தமிழக அரசு ரூ.10 ஊக்கத்தொகையாக வழங்கி வந்தது. தற்போது தமிழக அரசு அந்த ஊக்கத்தொகையையும் நிறுத்தி விட்டது. இதனால் பட்டுக்கூடு விலை சரியும்போது விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் ஒரு கிலோ உற்பத்திக்கு ரூ.50 முதல் ரூ.75 வரை அந்த மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.  மற்ற மாநிலங்களைவிட தமிழக பட்டுக்கூடு நல்ல சீதோஷ்ண நிலையில் உற்பத்தி செய்யப்படுவதால் உயர் தரத்துடன் உள்ளது. இருப்பினும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டுநூலுக்கு இறக்குமதி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்ததால், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. அரசின் அலட்சியத்தால் பட்டுக்கூடு உற்பத்தியை விவசாயிகள் கைவிட்டு வருகின்றனர்.

 ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் 60 சதவீத விவசாயிகள் தற்போது பட்டுக்கூடு உற்பத்தியை நிறுத்திவிட்டனர். உடனடியாக தமிழக அரசு பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50 வழங்க வேண்டும். மேலும் சீனா பட்டு நூலுக்கு கட்டுப்பாடு விதிப்பதுடன் இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மீண்டும் விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தியை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு சண்முகமூர்த்தி கூறினார்.

Tags : silkworm, farmers quit, Lack of price,gopi
× RELATED மதுரை அருகே மங்கி வரும் மண்பாண்ட தொழில்