×

மதுரை புத்தகத் திருவிழாவில் ரூ.4 கோடிக்கு புத்தகம் விற்பனை

*250 ஸ்டால்களில் அலைமோதிய வாசகர்கள்

மதுரை : மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் ரூ.4 கோடிக்கு புத்தகங்கள் விற்றுத் தீர்ந்ததுடன், கடந்த ஆண்டை விட இம்முறை வாசகர்களிடம் வரவேற்பு எகிறியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் 14வது ஆண்டாக இந்த ஆண்டு ‘புத்தகத் திருவிழா - 2019’ துவங்கி, 11 நாட்கள் நடந்தன. புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன், சங்கத்தலைவர் வயிரவன், செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் கூறியதாவது: கடந்த காலங்களை விட இம்முறை மதுரை புத்தகத்திருவிழாவிற்கான வரவேற்பு மக்களிடம் அதிகம் இருந்தது.

இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் இத்திருவிழாவில் பங்கேற்று, ரூ.4 கோடி வரையிலும் புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். அரங்கிற்குள் நடத்திய போட்டிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை அள்ளிச் சென்றனர். புத்தத்திருவிழா நாட்களில் பதிப்பகங்கள் 50க்கும் அதிக புதிய புத்தகங்களை வெளியிட்டு, வாசகர்களை ஆர்வப்படுத்தியது. 250 ஸ்டால்களிலும் 160 பதிப்பாளர்கள், 80க்கும் அதிக விற்பனையாளர்கள், ஊடக நிறுவனங்கள், குறுந்தகடு வெளியீட்டாளர்கள் என அத்தனை தரப்பினருக்கும் மிகுந்த திருப்தியளிப்பதாக இத்திருவிழா முடிந்திருக்கிறது. குழந்தைகளுக்கான எழுத்துப் பயிற்சி, அறிவியல் விழிப்புணர்வு என பல்வேறு பயன்கள் கிடைத்தன.

மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், தீயணைப்பு துறையினர் என பலரது ஒத்துழைப்பும் பாராட்டிற்குரியது. மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பிரபல எழுத்தாளர்களுடன் வாசகர்கள் இத்திருவிழாவில் நேரடியாக சந்தித்து உரையாடினர். அடுத்த ஆண்டும் மதுரையில் இதை விட கூடுதல் அம்சங்களுடன் புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Book sale ,Madurai Book Festival , Book Fair,Madurai ,book sale,
× RELATED மதுரை புத்தகத் திருவிழா நிறைவு ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை