×

திருப்பத்தூரில் தொடர் திருட்டு குரைத்த நாயை விஷ ஊசி போட்டு கொன்ற முகமூடி கொள்ளையர்கள்

* கும்பலை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
*  இரவில் கட்டைகளுடன் ரோந்து சுற்றும் இளைஞர்கள்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் முகமூடி கொள்ளையர்களின் திருட்டு சம்பவங்களை தொடர்ந்து இளைஞர்கள் உருட்டு கட்டைகளுடன் இரவில் ரோந்து சுற்றி வருகின்றனர். இந்த நிலையில் இரவில் குரைத்த நாய்க்கு விஷ ஊசி போட்டு கொன்ற சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. இந்த முகமூடி கொள்ளையர்கள் இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில்  வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டாததால் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 15ம் தேதியில் இருந்து தொடர்ந்து திருப்பத்தூர் ஆதியூர், லக்கிநாயக்கன்பட்டி, கதிரிமங்கலம், குனிச்சி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காரில் வரும் முகமூடி கொள்ளையர்கள் பூட்டிக்கிடக்கும் வீட்டை உடைத்து அதில் இருக்கும் பணம் நகைகளை திருடி செல்கின்றனர்.

இதுவரை, சுமார் 200 பவுன் நகைகள் மற்றும் ₹10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை திருடி சென்றுள்ளனர். ஆனால் இந்த திருட்டு, கொள்ளை சம்பவங்களில் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இரவில் உருட்டு கட்டைகளுடன் வாகனங்களில் ரோந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திருப்பத்தூர் அடுத்த லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் சலூன் கடை நடத்தி வரும் வெங்கடேசன்(35) மற்றும் அவரது மனைவி அமுதா ஆகிய இருவரும் இரவு வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவு ஒரு மணியளவில் கதவு உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே தூக்கத்தில் இருந்து எழுந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, 6 முகமூடி கொள்ளையர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி அலறி கூச்சலிட்டனர். உடனே அவர்கள் வளர்த்து வரும் நாய் கொள்ளையர்களை பார்த்து குரைத்துக்கொண்டே துரத்தியது. இதனால் ஆத்திரமடைந்த முகமூடி கொள்ளையர்கள், அந்த நாய்க்கு விஷ ஊசி போட்டு கொன்று அருகே உள்ள சாலையோரம் வீசி விட்டு மின்னல் வேகத்தில்  காரில் தப்பிச் சென்றுள்ளனர். அதேபோல், லக்கிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஷபி(40) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்படி திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலேயே கொள்ளையர்கள் முகாமிட்டு தொடர்ந்து தினமும் திருட்டில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர். இரவு நேரங்களில் பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரும்  லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் இரவு ரோந்து பணிகள் மேற்கொள்வதில்லையாம். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி இரவு நேரத்தில் உருட்டுக் கட்டைகள் மற்றும் தீப்பந்தங்களுடன். இரு சக்கர வாகனங்களில் ரோந்து சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவும் ஊர் இளைஞர்கள் வேறுபகுதியில் காவல் காத்துக் கொண்டிருந்தபோது வெங்கடேசன் வீட்டின் பூட்டை உடைத்திருப்பதும், நாய்க்கு விஷ ஊசி போட்டு கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மதியம் திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும், எங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. போலீசார் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எங்கள் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. போலீசாரையே கார் ஏற்றி கொலை செய்யவும் முயற்சி நடந்துள்ளது.
இந்த முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசத்தினால் இரவு நேரத்தில் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வருகிறோம்.

எங்களுடைய கணவன், பிள்ளைகள் கொள்ளையர்களை பிடிப்பதற்காக இரவு நேரங்களில் உயிரைப் பணயம் வைத்து காத்து வருகின்றனர். எனவே, முகமூடி கும்பலை உடனடியாக பிடித்து கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறினர்.   இதையடுத்து, டிஎஸ்பி தங்கவேலு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, முகமூடி கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை தேடி வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும், உங்கள் பகுதியில் போலீசாரை நியமித்து அந்த பகுதி முழுவதும் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

திருட்டை தடுத்ததால் கொல்ல முயற்சியா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெங்கடேசன் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர் சிங்காரவேலுவின் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் பணம் மற்றும் நகைகளை திருடி சென்றனர். அப்போது வெங்கடேசன் கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். உடனே அந்த கும்பல் வெங்கடேசனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், வெங்கடேசன் முகமூடி கொள்ளையர்களை பிடிக்க முயன்றதால் அவரை கொலை செய்வதற்காக முகமூடி கொள்ளையர்கள் வந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.


Tags : robbers , thirupathur,Masked robbers,dogs ,Poison injection
× RELATED தமிழகம் முழுவதும் எஸ்பிஐ ஏடிஎம்மில் 9...