×

6 மாதம் நிற்கும் உத்தரவு நீட்டிப்பு கோவில்பட்டியில் அந்தியோதயா ரயில் தொடர்ந்து நின்று செல்லும்

*மத்திய ரயில்வே வாரியம் அனுமதி

நெல்லை :  தாம்பரம்  - நாகர்கோவில் இடையே முன்பதிவற்ற பெட்டி வசதிகளைக் கொண்ட அந்தியோதயா ரயில்  இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை  - சென்னை  வழித்தடத்தில் அதிக கூட்ட  நெரிசல் இருப்பதால் டிக்கெட் கிடைக்காத ஏழை பயணிகளுக்கு இந்த  ரயில் வரப்பிரசாதமாக உள்ளது. எனினும் இந்த ரயிலுக்கு நெல்லையை அடுத்த  கோவில்பட்டியில் ரயில் நிறுத்தம் இல்லாததால் நெல்லை, தூத்துக்குடி  மாவட்டங்களைச் சேர்ந்த ரயில் பயணிகள் அந்தியோதயா ரயிலை பிடிக்க நெல்லை வர  வேண்டியிருந்தது.

எனவே அந்தியோதயா ரயிலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில்  நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.  இதையடுத்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில் கடந்த மார்ச் 8ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு நின்று செல்ல தெற்கு ரயில்வே உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது மறு அறிவிப்பு வரும் வரை கோவில்பட்டியில் ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில் நின்று செல்லும் என மத்திய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே  மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கூறியிருப்பதாவது: தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் கோவில்பட்டியில் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்ல ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் கோவில்பட்டியில் காலை 10.26 மணிக்கு வந்து 2 நிமிடங்கள் நின்று 10.28 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டு செல்லும். இதே போல மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் மாலை 6.10 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று மாலை 6.12 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் தொடர்ந்து நின்று செல்ல உத்தரவிட்டுள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.


Tags : Kovilpatti ,Antiochia , Anthiyodaya Train,kovilpatty ,Tambaram, Nagarcoil
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா