நாமக்கல் அருகே திருமணிமுத்தாற்றில் சாய கழிவுகள் கலப்பதால் சாலையில் பனிப்பாறைகள் போல் காட்சியளிக்கும் நுரை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் சேர்வராயன் மலை தொடரில் மஞ்சவாடி கணவாயில் உருவாகும் திருமணிமுத்தாறு, சேலம் மற்றும் நாமக்கல் வழியாக பாய்ந்தோடி நன்செய் இடையார் என்ற ஊரில் காவிரியில் கலக்கிறது. அண்மையில் அந்த மாவட்டங்களில் பரவலாக பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் அதிகளவில் நீர் செல்கிறது. இதை பயன்படுத்தி கொண்டு சட்டவிரோதமாக சாய ஆலை வைத்திருப்போர் ரசாயன சாலை கழிவுகளை ஆற்றில் கலந்து விட்டுள்ளனர். இதன் காரணமாக ராசிபுரம் அருகே மதியம்பட்டி கிராமத்தை கடந்து செல்லும் திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி எழுகிறது.

இதை தொடர்ந்து மல்லசமுத்திரம், மதியம்பட்டி சாலை தரைப்பாலத்தை கடக்கும் போது நுரை சாலையில் தேங்கி விடுகிறது. பனிப்பாறைகள் போல் சாலையில் தேங்கி நிற்கும் நுரையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருமணிமுத்தாறு நீரை நம்பி அந்த ஊரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். மதியம்பட்டியில் 500 ஏக்கர் விளைநிலங்கள் திருமணிமுத்தாற்றில் பாசன வசதி பெறுகின்றன. தற்போது நல்ல மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வரும் வேலையில் சாய ஆலைக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது பொதுமக்களையும், விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதை அடுத்து சாய கழிவு கலந்த நீரால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதுடன், நிலத்தடி நீரும் நஞ்சாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நல்ல மழை பெய்து ஒவ்வொரு முறையும் திருமணிமுத்தாற்றில் அதே அளவு நீர் பொங்கும் போதெல்லாம் நுரையும் பொங்குவதாக குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், சட்டவிரோத சாய ஆலைகளை ஒழிப்பதுடன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Namakkal, Thirumanimuthar, Dye waste, Glacier, View, Foam
× RELATED மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில்...