நாகை அக்கரைப்பேட்டை கடற்கரையில் படையல் வைத்து சமுத்திர ராஜ வழிபாடு

*உலக அமைதிவேண்டி பெண்கள் நடத்தினர்

நாகை : நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பிரமோத்சவ விழாவை முன்னிட்டு 700க்கு மேற்பட்ட பெண்கள் உலக அமைதிவேண்டியும், சுனாமி உள்ளிட்ட பேரிடரிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டியும் படையல் வைத்து சமுத்திர ராஜ வழிபாடு நடத்தினர்.நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பிரமோத்சவ விழா கடந்த 5ம்தேதி விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கடந்த 6ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கடந்த 7ம்தேதி துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றம் நடைபெற்றது.

 பின்னர் அன்று இரவு ரேணுகாதேவி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தினம்தோறும் அம்பாளுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.
நேற்று காலை 9 மணி அளவில் அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு, குங்குமம், மஞ்சள், திருநீறு, இளநீர், பழங்கள், பால், நவதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

பின்னர் பெண் பக்தர்கள் அனைவரும் கோயிலில் இருந்து அம்மனுடன் ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரைக்கு வந்தனர். பின்னர் அங்கு சுமார் 700க்கும் மேற்பட்ட பெண்கள் வங்க கடற்கரையில் கூடி நின்று தேங்காய், வாழைப்பழம், ஆப்பிள், பூ, குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை படையல் வைத்து ஊதுபத்தி, சூடம் கொளுத்தி உலக நன்மைக்காகவும், சுனாமி, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டியும் சமுத்தி ராஜ வழிபாடு நடத்தினர்.
பின்னர் தங்கள் கையில் எடுத்து வந்து வழிபட்ட தேங்காய், பழம், பூக்களை கடலில் விட்டனர். நேற்று இரவு அன்னபூரணி அலங்காரத்தில் அம்பாள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இன்று (12ந்தேதி) அம்பாள் காளி அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் வீதி உலாகாட்சி நடைபெறுகிறது.

வருகிற 15ம்தேதி பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடி எடுத்து வந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் முத்துமாரியம்மன் தேருக்கு எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றுமாலை 3.30 மணி அளவில் செடில் உற்சவம் விடிய விடிய நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தாரும், பொதுமக்களும் செய்து வருகிறார்கள்.

Tags : beach ,Nagai ,Akkarepattu , Nagapatinam ,Akkaraipettai ,sea ,Maritime ,royal worship
× RELATED செல்வம் கொழிக்கும் குபேர பானை வழிபாடு