கரைக்கு திரும்பிய பாம்பன் மீனவர்கள் படகில் திரளாக சிக்கிய திருக்கை மீன்

ராமேஸ்வரம் : மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து கரை திரும்பிய பாம்பன் மீனவர்களின் படகில் அதிகளவில் திருக்கை மீன்கள் சிக்கியது. பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து, விரட்டியடிக்கும் செயலில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் வேறு வழியின்றி நேற்றும் நூற்றுக்கணக்கான படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

பாம்பன் கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவு முழுவதும் கடலில் மீன் பிடித்த மீனவர்களின் வலையில் அதிகளவில் வல்வாடி திருக்கை மீன்கள் சிக்கின. மேலும் பலவகை மீன்களும் ஏராளமாக சிக்கியதால் பிடிபட்ட மீன்களுடன் நேற்று காலை படகுகள் அனைத்தும் கரை திரும்பின. படகில் பிடித்து வரப்பட்ட மீன்களை நாட்டுப்படகு மூலம் கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் கூடைகளில் விற்பனை அடுக்கி வைத்தனர். எப்போதும் பிடிபடும் மீன்களுடன் ஒரே அளவிலான எடையுடன், டன் கணக்கில் வல்வாடி திருக்கை மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

்பிடிபட்ட திருக்கை மீன்கள் ஒவ்வொன்றும் 8 கிலோ முதல் 10 கிலோ எடைக்குள் இருக்கும். ஆழ்கடலில் இரை தேடி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டமாக செல்லும்போது எப்போதாவது மீனவர்களின் மீன்பிடி வலையில் இதுபோல் ஒரே வகையான மீன்கள் பிடிபடும். இவ்வகையில் திருக்கை மீன்கள் அதிகளவில் சிக்கியுள்ளது என்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். இவ்வகை திருக்கை மீன்கள் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. மீனவர்களால் பிடித்து வரப்பட்ட திருக்கை மீன்களை வியாபாரிகள் போட்டிபோட்டு விலைக்கு வாங்கி சென்றனர்.

Tags : fishermen ,Pamban ,shore , Rameshwaram , Pampan fisherman,Turtle fish
× RELATED புதுகை மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு