தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக எந்த முதல்வரும் வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை பெறவில்லை : கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக எந்த ஒரு முதல்வரும் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை பெற நடவடிக்கை எடுக்கவில்லை என கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை செல்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கோவை விமானநிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ரூ.2.42 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, அதில் 53 ஆயிரம் கோடிக்கு 29 தொழில்கள் துவங்கப்பட்டது. சுமார் 67 தொழில்கள் துவங்கப்பட உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனே தொழில் துவங்கிவிட முடியாது, அதற்கான நிலங்களை கையகப்படுத்தப்பட வேண்டும். நிதி, வங்கி கடன் போன்றவை தயார் செய்யப்பட வேண்டும். பெரிய தொழில்கள் என்றால் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்.  

 எனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் 35,520 பேருக்கு  தமிழகத்தில் வேலை கிடைக்கும். தமிழகத்திலிருந்து கடந்த 40 ஆண்டுகளில் எந்த ஒரு முதலமைச்சரும் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்க்கவில்லை.  கோவை அவிநாசி சாலையில் 9 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி வரும் 4 மாதங்களில் துவங்கப்பட உள்ளது. காவிரி ஆற்றிலிருந்து ஆதனூர் குமாரமங்கலம் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. கரூர் அருகே புகழூரில் ஒரு டி.எம்.சி நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. டெல்டா பாசனத்தில் தூர்வாரும் பணிக்கு ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர் மேலாண்மை முதலீட்டாளர்கள் தொழில் துவங்க  உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. எனது வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Tags : For the last 40 years, no CM, gone abroad
× RELATED முறைப்படி அறிவித்தார் ஜனாதிபதி:...