×

அதிரடிப்படை வீரர் தற்கொலை முயற்சி

சென்னை: தரமணி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் திவாகர் (31). காவல் துறையில் சிறப்பு அதிரடிப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி 25ம் தேதி மரக்காணம் அடுத்த தக்கமேடு பகுதியை சேர்ந்த அனிதா  (25) என்பவருடன் திருமணம் நடந்தது. அனிதா சின்னமலை பகுதியில் தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். திருமணம் நடைபெற்ற நாள் முதல் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டுள்ளனர்.  பின்னர் அனிதா கணவரை விட்டு பிரிந்து குரோம்பேட்டையில் அண்ணன் முறையான துரைராஜ் என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை திவாகர் சேர்ந்து வாழுமாறு குரோம்பேட்டையில் உள்ள மனைவி அனிதாவை அழைத்துள்ளார். அவர், வர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் திவாகர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது உணவு இடைவேளையின் போது பிற்பகல் 2.30 மணியளவில் பழைய கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அதிரடிப்படை வீரர்களுக்கான ஓய்வு அறைக்கு சென்று எலி மருந்தை சாப்பிட்டு  தற்கொலைக்கு முயன்றுள்ளார். சக வீரர்கள் பார்த்து திவாகரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் எழும்பூர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு  செய்து தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். — எழும்பூர் எல்.ஜி ரவுண்டான அருகே கூவம் கால்வாயில் நேற்று காலை 9 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் எழும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். எழும்பூர் போலீசார்  மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த வடிவேல் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கூவம் கால்வாயில் மிதந்த இளம் பெண்ணின் உடலை மீட்டனர்.

அப்போது அந்த பெண் பச்சை நிற நைட்டியும், பாசிமணி நிறத்தில் தாலியும் அணிந்திருந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண்ணின் படத்தை சென்னையில் உள்ள மற்ற காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து, ‘பெண் காணவில்லை’ என்று ஏதேனும் புகார் வந்துள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்துள்ளதால் யாரேனும் கொலை செய்து அதிகாலை நேரத்தில் உடலை கூவம் கால்வாயில் வீசி சென்றார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Action Soldier ,suicide , Action Soldier ,attempted suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை