×

மாவட்ட நிர்வாகம் அலட்சியம் செய்ததால் வேங்கைவாசல் சித்தேரியை சீரமைக்கும் பொதுமக்கள்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் சித்தேரி உள்ளது. சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க கடந்த 15 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று  கூறப்படுகிறது. இதனால் மழை காலங்களில் ஏரியில் தண்ணீர் நிற்காமல் இருந்து வந்ததால் அப்பகுதி முழுவதும் நிலத்தடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே ஏரியை தூர்வாரி தண்ணீர் சேமிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தபோது பணம் இல்லை என கூறி மாவட்ட நிர்வாகம் கைவிரித்ததாக கூறப்படுகிறது.  இதனால் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் ஏரியை பொதுமக்களே முன்வந்து அவர்களது சொந்த செலவில் ஏரியை சீரமைக்க அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து ஏரியில் தற்போது உள்ள அளவில் இருந்து ஒரு மீட்டர் ஆழப்படுத்தி ஏரியின் கரையை பலப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கினார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைத்து சித்தேரி புனரமைப்பு குழு என்கிற குழுவை தொடங்கி, அதில் அப்பகுதி பொதுமக்களை இணைத்து ஏரியை தூர்வாரும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தொடங்கினர். தற்போது முதல் கட்டமாக 10 லட்சம் செலவில் 2 பொக்லைன் மற்றும் 5 லாரிகள் கொண்டு, பொதுமக்கள் ஏரியை சீரமைக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “வேங்கைவாசல் சித்தேரியை  தூர்வாரி சீரமைக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். அரசிடம் பணம் இல்லை என கைவிரித்துவிட்டனர்.  எனவே ஏரியை நாங்களே சீரமைத்து வருகிறோம். முதல் கட்டமாக ₹10 லட்சம் செலவில் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தி வருகிறோம். இரண்டாம் கட்ட பணியின்போது ஏரி கரையில் நடைபாதை அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம்.  இது பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்ய வசதியாக இருக்கும்.

அவ்வாறு நடைபாதை அமைக்கப்பட்ட பின்னர் சுற்றிலும் மின்விளக்கு அமைக்கவும், காவலாளியை நியமிக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். இந்த பணிகளை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். ஆனால் அக்டோபர் மாதம் மழை காலம் என்பதால் இந்த மாதம் இறுதிக்குள் ஏரியை சீரமைத்து முடிக்க வேண்டும் என நாங்கள் திட்டமிட்டு தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை என பணிகளை வேகமாக  செய்து வருகிறோம். ஏரியை சுற்றி தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் 1500 பனைமர விதைகள் நட்டுள்ளோம்.

மேலும் இளம்தளிர் என்ற பெயரில் குழந்தைகளுக்கான குழு ஒன்றை துவங்கி விதைகள் சேகரித்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் பகுதிக்கு ஒரு நாளுக்கு 12 லட்சம் முதல் 15 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவையாக உள்ளது. இதுபோல  நாங்கள் ஏரியை சீரமைத்து அதில் தண்ணீர் சேகரிக்கும்போது எங்கள் பகுதிக்கு ஒரு நாளுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என நம்புகின்றோம்’’ என்றனர்.


Tags : Vengivasal Siddheri ,district administration , A district administration, venkaivacal citteri, public
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்