வில்லிவாக்கத்தில் நடந்த டிரைவர் கொலையில் 5 பேர் கைது

அண்ணாநகர்: வில்லிவாக்கம், பாட்டையா தெருவில் வசித்து வந்தவர் புதியவன் (51). தென்னக ரயில்வே யூனியன் பொதுச்செயலாளர். இவரிடம், வில்லிவாக்கம் பலராமபுரம், அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த பாஸ்கர் (42) என்பவர்  கார் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2018ம் ஆண்டு பாஸ்கர் தனது தம்பிக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தரும்படி புதியவனிடம் 5 லட்சம் கொடுத்துள்ளார். புதியவன் வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த  பாஸ்கரன் கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி புதியவனை கொலை செய்தார். ஐசிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த பாஸ்கரன் கால்டாக்சி ஓட்டி வந்தார். அப்போது புதியவனின் அக்கா மகன் சுபாஷ் மற்றும் அவரது கூட்டாளி சுகன் ஆகியோரிடம், ‘‘எனது பணத்தை தராவிட்டால் உன்னையும், உனது  அக்காவையும் கொலை செய்து விடுவேன்’’ என்று மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்த வந்த பாஸ்கரனை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. போலீசார் வழக்கு பதிந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தபோது புதியவனின் அக்கா  மகன்களான சூரப்பேட்டையை சேர்ந்த சுபாஷ், அவரது கூட்டாளி சுகன் ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது.  இதையடுத்து, சூரப்பேட்டை தனியார் பள்ளி அருகே பதுங்கி இருந்த சுபாஷ், சுகன், கேசவமூர்த்தி, செபாஸ்டின் மற்றும் ஜெயாஸ் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சங்கர் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>