விழிப்புணர்வு நடவடிக்கையில் கோட்டைவிட்டதால் தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்: விழித்துக் கொள்ளுமா சுகாதாரத்துறை

சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், வழக்கத்துக்கு முன்னதாகவே டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு  நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை  நீர் தேங்கி நிற்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் கொசுக்களின் பெருக்கத்தால் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் வகை கொசு, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தேங்கிய நல்ல நீரில் உருவாகி நோய்களை  பரப்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு  விழிப்புணர்வு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்களே முறையாக பராமரிக்கப்படாததால் அரசு கட்டிடங்களே டெங்கு கொசுக்களை உற்பத்தி  செய்யும் மையங்களாக உள்ளன. டெங்கு காய்ச்சலுக்கு என தனியே தடுப்பு மருந்து இல்லாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுதல் மூலம் டெங்கு  பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும். சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளை காய்ச்சலுக்கு தனி வார்டுகளை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்கள் இப்போதே டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் டெங்கு  இறப்புகள் கடந்த ஆண்டுகளை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related Stories: