ரயில்வே ஸ்டேஷனில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை:கோட்ட மேலாளர் எச்சரிக்கை

சென்னை: ‘‘ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் எச்சரித்துள்ளார்.  ரயில்வே அமைச்சகம் சார்பில், ‘ஸ்வாச் பாரத்’ எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.  அதன்ஒருபகுதியாக, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்  நிலையத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் முன்னிலை வகித்தார். சென்னை கோட்ட துணைமேலாளர்கள் முகுந்த், மனோஜ்  உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மகேஷ்  நிருபர்களிடம் கூறியதாவது:  

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு, அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறும்.  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்  பொருட்களை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளை, அரைத்து தூளாக்கி மறுசுழற்சி செய்யும் வகையில் 4 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அந்த 4 இயந்திரங்களும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ரயில்  நிலையங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி வருகிறோம். அவ்வாறு பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வவாறு அவர் கூறினார்.

Related Stories: