தடுப்பணைகள், அணைகள் இல்லாததால் வீணாக தண்ணீர் கடலில் கலக்கிறது: முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை: கடலில் கலக்கும் தண்ணீரால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: எட்டு ஆண்டு காலமாக தண்ணீர் பற்றாக்குறையால் காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. ஒரு போக சம்பா சாகுபடியும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.  இதற்கு இயற்கை சீற்றங்கள் மட்டுமல்ல, செயற்கை இடர்பாடுகளும் காரணமாகும். இவ்வாண்டு ஆகஸ்ட் 13ல் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டு ஒருமாத காலம் ஆகி விட்டது.

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டும் இதுவரை கடை மடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. சாகுபடி பணிகள் தொடங்கவில்லை. பாசன  வடிகால்கள் தூர்வாரும் பணிகள் மற்றும் மராமத்து பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. இப்பணிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, சுயநல ஆதாயம் தேடும் நோக்கத்துடன் காலதாமதமாக தொடங்கி, ஒதுக்கப்படும் நிதியை பங்கிட்டு  கொள்ள வழிவகை காணப்படுகின்றது.

இதன் விளைவாக கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். மறுபக்கம் எவ்வித பயன்பாடும் இன்றி தண்ணீர் கடலுக்கு செல்கின்ற கொடுமை நடந்து வருகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 227  டிஎம்சி தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலுக்கு சென்று வீணானது என தெரிவிக்கப்படுகிறது.

காவிரி, வெண்ணாற்றில், கொள்ளிடத்தில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால் மட்டுமே மழைக்கால உபரி தண்ணீர் வீணாகாமல் சேமிக்க முடியும் என்பதை அறிந்திருந்தும் அதிமுக அரசு இதில் கவனம் செலுத்தவில்லை.  இதனால் நடப்பாண்டிலும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாண்டு மேட்டூர் அணை உள்பட பல்வேறு வாய்கால்கள் தூர்வாரும் பணிகள் என்ன. அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்து, தமிழக அரசு பகிரங்கமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், தண்ணீர்  சேமிப்பு தடுப்பணைகள் கட்டுவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: