தமிழகத்தில் நடக்கும் 2 ஆயிரம் கோடியிலான பணி குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை அரசுக்கு அறிக்கை தர வேண்டும்

* மாநிலம் முழுவதும் முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு

* கட்டுமானத்தில் குறை இருந்தால் நடவடிக்கை
Advertising
Advertising

* பொறியாளர்கள் கலக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு துறைகளுக்கு நடந்து வரும் கட்டுமான பணிகளை முதன்மை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்யவும், அது தொடர்பான விவரங்களை 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கையாக  அரசுக்கு அளிக்கவும் முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். தமிழக பொதுப்பணித்துறை கட்டுமானம் பிரிவு மூலம் சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ₹2 ஆயிரம்  கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று கோட்ட செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கட்டுமான பணிகளின் தரம் குறைவாக இருப்பதாக சில நேரங்களில் புகார் வருகிறது. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் ஆர்க்கிடெக்ட், கட்டுமான பிரிவு திட்டம் மற்றும் வடிவமைப்பு துறை ஆகியவை மாதம் இரு முறை  ஆய்வு செய்ய கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் ராஜா மோகன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர்கள் பணிகளை ஆய்வு செய்த பிறகு, அந்த அறிக்கையை வைத்து முதன்மை தலைமை பொறியாளரையும் ஆய்வு செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு  முறை ஆய்வு செய்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து முதல் கட்டமாக, கடந்த 9ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடந்து வரும் மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவமனை கட்டுமான பணிகளை முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். தொடர்ந்து தமிழகம்  முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் புதிய கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார்.  அப்போது கட்டுமான பணிகளில் குறைபாடுகள் ஏதுமிருந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி முதன்மை தலைமை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது, பொறியாளர்கள் மத்தியில் திடீர்  கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: