பொதுப்பணித்துறையில் திட்ட மதிப்பீட்டை சரிபார்ப்பதில் தாமதம் திட்டம், வடிவமைப்பு பிரிவை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

* பொறியாளர்களின் கமிஷன் நச்சரிப்பால் பணிகள் கடும் பாதிப்பு

* தமிழக அரசு அதிரடி முடிவு

சென்னை: பல ஆயிரம் கோடி செலவில் நடக்கும் கட்டுமான பணிக்கான திட்ட மதிப்பீட்டை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்படுவதால், அரசு பணிகள் அப்படியே தேங்கி கிடக்கிறது. எனவே, குறிப்பிட்ட சில துறைகளின் பணிகளை  தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, அதில் பணிபுரியும் பொறியாளர்களை வேறு இடங்களுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு அரசு துறைகளுக்கான மருத்துவமனை, அலுவலகம், பள்ளி வகுப்பறைகள் உள்பட பலவற்றை கட்டி தருகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. முன்னதாக 2 கோடிக்கு மேல் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு ஒவ்வொரு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்து பொதுப்பணித்துறை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை தலைமை திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு மூலம் அந்த திட்ட மதிப்பீடு சரி தானா, ஸ்டெக்சுரல் வடிவமைப்பு சரியாக போடப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்ய பரிந்துரை செய்கிறது. அவர்கள், ஆய்வு  செய்த பிறகே அந்த திட்ட பணிகளுக்கு துறை தலைமை ஒப்புதல் தருவதாக கூறப்படுகிறது. இதை திட்டம் மற்றும் வடிவமைப்பு பொறியாளர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு பொறியாளர்களிடம் கமிஷன் கேட்பதாக கூறப்படுகிறது.  அதாவது 10 கோடி பணி என்றால் 1 லட்சம் வரை  கமிஷன் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த கமிஷன் பணத்தை தர மறுக்கும் செயற்பொறியாளர்களின் திட்ட பணிகளுக்கு மதிப்பீடு சரி செய்யாமல் திட்ட வடிவமைப்பு பொறியாளர்கள் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் திட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தொடங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனாலேயே பல நேரங்களில் அரசுக்கு கூடுதலாக திட்ட செலவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொதுப்பணித்துறை கட்டுமானம் திட்ட வடிவமைப்பு பிரிவிடம் கட்டுமான பணிக்கான திட்ட மதிப்பீட்டை தராமல் தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  ஏற்கனவே ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியின் திட்ட மதிப்பீடு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே போன்று இனி அனைத்து பணிகளையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டுமான  பிரிவு திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவை மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் எழுந்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்தாண்டு ₹2 ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு துறைகளின் கட்டுமான பணிகளுக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மீது திட்ட மதிப்பீடு மற்றும்  ஸ்டெச்சுரல் வடிவமைப்பு சரிபார்ப்பதில் தாமதம் ஏற்படுவதால், அந்த பணிகளுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், செப்டம்பர் முடியவுள்ள நிலையில், அந்த பணிகளுக்கு டெண்டர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது’ என்றார்.

Related Stories: