×

ஜெயலலிதா சமாதியில் நடந்த திருமணம்: அதிமுக தொண்டரின் முடிவால் பரபரப்பு

சென்னை: அதிமுக தொண்டர் ஒருவர் தனது மகனின் திருமணத்தை ஜெயலலிதா சமாதியில் வைத்து நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணங்கள் வழக்கமாக கோயில்கள், வீடுகள், மண்டபங்களில் நடைபெறுவதுதான் வழக்கம். ஆனால், முதல் முறையாக வித்தியாசமான முறையில் ஜெயலலிதா சமாதியில் நடைபெற்ற திருமணம் சென்னையில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: சென்னை, சிந்தாமணியில் உள்ள கூட்டுறவு சிறப்பு அங்காடி இயக்குனர் பவானிசங்கர்.  
இவர் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார்.  இவர் அதிமுகவின் தீவிர விசுவாசி. தனது மகனின் திருமணத்தை ஜெயலலிதா  தலைமையில் நடத்த விரும்பினார். ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவரது சமாதியில்   வைத்து தனது மகனின் திருமணத்தை நடத்த ஆசைப்பட்டு, அதிமுக தலைமைக்கு  வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதிமுக தலைமை  ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில்  நேற்று தனது மகன் எஸ்.பி.சாம்பசிவராமன் என்கிற சதீஷ் - ஆர்.தீபிகா  ஆகியோரது திருமண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.  அனைத்துலக  எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த இந்த திருமண  நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, ஜெயலலிதாவிடம் உதவியாளராக  பணிபுரிந்த பூங்குன்றன் உள்பட ஏராளமானோர்  கலந்துகொண்டனர். ஜெயலலிதா  நினைவிடத்தில் வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க, பூங்குன்றன்  எடுத்து கொடுத்த தாலியை மணமகன் சதீஷ், மணமகள் தீபிகா கழுத்தில் கட்டினார்.  இதில் இருவீட்டார் மற்றும் உறவினர்கள்  பங்கேற்றனர். பின்னர் மணமக்கள்  ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி வந்து வணங்கினர்.

இதுகுறித்து  பவானிசங்கர் கூறுகையில், ஜெயலலிதா நினைவிடத்தில் எனது மகன் திருமணம்  நடந்துள்ளதால், ஜெயலலிதா ஆன்மா நிச்சயம் மணமக்களை ஆசீர்வதித்திருக்கும்  என்றார்.  திருமணத்தையொட்டி ஜெயலலிதா நினைவிடம்  நேற்று இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் பூக்களால் அலங்கரித்து  வைக்கப்பட்டிருந்தது. மணிமண்டபம் கட்டும் பணி காரணமாக, ஜெயலலிதா  நினைவிடத்தில் கடந்த சில மாதங்களாக  பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.  இந்த திருமணத்தையொட்டி மெரினாவுக்கு வந்த பெரும்பாலானோர் ஜெயலலிதா  நினைவிடத்தை நேற்று பார்த்து செல்ல முடிந்தது. இதுகுறித்து ஜெயலலிதா சமாதியை பார்வையிட்ட வந்த சிலர் கூறும்போது, “ஜெயலலிதா நினைவிடத்தில் திருமணம் நடப்பது இதுவே முதல்முறை. இந்த திருமணத்தை தொடர்ந்து இனி அதிமுக தொண்டர்கள் அதிகம் பேர் இங்கு வந்து  திருமணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளது” என்று கூறினர்.


Tags : volunteer ,AIADMK , Jayalalithaa, Samadhi, Marriage, Admk
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...