கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று திரும்பிய போது விபத்து கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்தது : 35 பேரை கிராம மக்கள் போராடி மீட்டனர்

பாபநாசம்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மேலராமநல்லூர் கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் மறுகரையில் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் மற்றும் கிராமங்கள் உள்ளது. தற்போது முக்கொம்பில் இருந்து 37,000 கனஅடி திறந்து விட்டுள்ளதால் கொள்ளிடத்தில் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் மேலராமநல்லூரில் உள்ள மாரியம்மன், விநாயகர், அனுமார் உள்ளிட்ட 5 கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கபி்ஸ்தலம், குடிக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 35 பேர், மேலராமநல்லூருக்கு நேற்று காலை படகில் சென்றனர். பின்னர் விழா முடிந்து மாலையில் ஒரு படகில் 35 பேரும் திரும்பி கொண்டிருந்தனர்.  அப்போது கொள்ளிடம் ஆற்றின் நடுவே வந்தபோது படகு திடீரென கவிழ்ந்தது. இதில் ஆற்றின் நடுவே இருந்த நடுத்திட்டில் ஏறி 24 பேர் பத்திரமாக நின்று கொண்டனர். பார்வதி (55), செல்வநாயகி (50) உள்ளிட்ட 11 பேர் படகை பிடித்தபடி தண்ணீரில் தத்தளித்தனர்.

Advertising
Advertising

இதை மேலராமநல்லூரை சேர்ந்த ஆற்றின் கரையோரம் நின்று பார்த்து அதிர்ச்சியடைந்த 15 பேர் விரைந்து தண்ணீரில் குதித்து நீந்தி சென்று கவிழ்ந்த படகை அரையத்தமேட்டு கரைக்கு தள்ளி சென்றனர். இதுபற்றி, தகவல் கிடைத்ததும் பாபநாசம் தீயணைப்பு துறையினர் மற்றும் தஞ்சை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ  இடத்துக்கு சென்றனர்.  ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட 11 பேரையும் ஒரு காரில் ஏற்றி கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது.  மேலும், கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: