அரசு இயந்திரம் எவ்வளவு வேகமாக செயல்படுது பாருங்க... ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்கிய மரக்கன்று திட்டத்துக்கு 198 கோடி நிதி

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான முதல் மரக்கன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காமராஜர் சாலையில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலை அருகில் நட்டு வைத்து திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பூங்காக்கள், அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் காலியான இடங்கள், வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை சமன்படுத்தி பசுமையை காக்க தமிழக அரசு முடிவு செய்தது.

Advertising
Advertising

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 64 லட்சம் மரக்கன்றுகளும், வனத்துறை சார்பில் 7 லட்சம் மரக்கன்றுகளும் நட்டு அதனை பராமரித்திட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு, தற்போது இதற்காக 198.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவில் தொடங்கி குறித்த காலத்திற்குள் முடித்திட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் அனைத்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், 6 மாதம் கழித்து தற்போது நிதி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: