தலைமை செயலகத்தில் புகுந்த நல்லபாம்பு

சென்னை: தலைமை செயலகத்தில் நேற்று நல்லபாம்பு ஒன்று சிக்கியது. தொடர்ந்து சில நாட்களாக தலைமை செயலக வளாகத்தில் பாம்புகள் படையெடுப்பதால் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னை, கோட்டை வளாகத்தில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலகம் உள்ளது. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அமைச்சர்கள், அதிகாரிகளை பார்க்க தினசரி 1000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். மொகரம் என்பதால் நேற்று அரசு விடுமுறை, ஊழியர்கள் யாரும் அலுவலகம் வரவில்லை. 50க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் மட்டும் பணியில் இருந்தனர். இந்த நிலையில், நேற்று பிற்பகல் 2 மணி அளவில், தலைமை செயலக வளாகத்தின் 4வது நுழைவு வாயில் அருகே சுமார் 2 அடி நீளமுள்ள நல்லபாம்பு குட்டி ஒன்று செல்வதை அங்கிருந்த காவலர் பார்த்துள்ளார். இதுபற்றி உடனே கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து, நல்லபாம்பை லாவகமாக பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertising
Advertising

தலைமை செயலகத்தில் சமீப காலமாக பாம்புகள் படையெடுப்பு தொடர் கதையாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன், சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தலைமை செயலக வளாகத்திற்குள் உள்ள லாபியில் சாரைபாம்பு ஒன்று பிடிபட்டது. பின்னர், தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 2வது மாடியில் பெண்கள் கழிவறை அருகே பாம்பு ஒன்று பிடிபட்டது. அப்போது அங்கு இருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதேபோன்று கடந்த இரண்டு வாரத்துக்கு முன், தலைமை செயலகத்தின் 6வது நுழைவு வாயில் எதிரே உள்ள பூங்கா புதருக்குள் ஒரு நல்லபாம்பு செல்வதை பார்த்து, அங்கிருந்த காவலர்கள் பிடித்து வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

இப்படி தொடர்ச்சியாக தலைமை செயலக வளாகத்தை சுற்றி நல்ல பாம்பு, சாரைபாம்பு பிடிபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் ஊழியர்கள் அச்சத்துடனே பணியாற்றும் நிலை உள்ளது. இதற்கு, தலைமை செயலக வளாகம் முழுவதும் குப்பைகள் அகற்றப்படாமல், புதர்கள் மண்டி கிடப்பதே காரணம் என்று ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால், தலைமை செயலகம் வளாகத்தை சுற்றியுள்ள அகழி மற்றும் பூங்காவை சுத்தமாக பராமரித்து, பாம்புகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலக ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: