காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பழ வியாபாரி வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோப்பூரில் சமீபத்தில் பழ வியாபாரி வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  வீட்டுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள், பழ வியாபாரி இல்லாததால் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலில் வியாபாரி ஹமிதுல்லா ராதெரின் பேத்தியான பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பதுங்கி இருப்பதாக நேற்று வந்த தகவலை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.

Advertising
Advertising

போலீசாரை பார்த்த தீவிரவாதி அங்கிருந்து தப்பி செல்வதற்கு முயன்றான். மேலும் போலீசார் மீது கையெறி குண்டை வீசினான். இதில், இரண்டு போலீசார் காயமடைந்தனர். போலீசார் எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாத தீவிரவாதி அங்கிருந்து தப்ப முயன்றான். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதி லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த ஆசிப் மக்பூல் பாட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இவன் பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளான். போஸ்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தது, கடைகளை திறக்க வேண்டாம் என மிரட்டியது, அன்றாட பணிகளில் ஈடுபடக் கூடாது என மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளான். சோப்பூரில்  பழ வியாபாரி வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்திலும் ஆசிப்புக்கு தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: