தலைவலி மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு

பெங்களூரு: பெங்களூரு ஆனேக்கல்லை சேர்ந்தவர் முனிசப்பா. இவரது மனைவி அனுஷியாம்மா. கடந்த 15 ஆண்டுகளாக இவர் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. அவ்வப்போது, மருந்து மாத்திரை எடுத்து கொள்வார். மாத்திரை சாப்பிட்டால், தலைவலி குறைந்துவிடும். பின்னர் மீண்டும் தலைவலி ஏற்படும் போது மாத்திரை எடுத்து கொள்வார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக எவ்வளவு மாத்திரை எடுத்து கொண்டாலும், தலைவலி குறைந்ததாக தெரியவில்லை. இதனால் மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, அளவுக்கு அதிகமாக மாத்திரை எடுத்து கொண்டார்.

Advertising
Advertising

நேற்று முன்தினம் 15 மாத்திரைகளை ஒரே நேரத்தில் எடுத்துள்ளார். இதில் சுயநினைவு இழந்து மயக்க நிலைக்கு சென்ற அவர், வீட்டில் சுருண்டு விழுந்து கிடந்தார். இவரது மகள் ஷோபா, தாயின் நிலையை பார்த்து அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அனுஷியா கண்விழிக்கவில்லை. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: