×

பஸ், லாரி விற்பனை குறைவுக்கும் மக்கள் வாங்காததுதான் காரணமா? : மத்திய நிதியமைச்சருக்கு காங். கேள்வி

புதுடெல்லி: ‘நாட்டில் பஸ், லாரி விற்பனை குறைந்ததற்கு அதனை அதிகம் பயன்படுத்தும் மக்கள் வாங்காததுதான் காரணமா?’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. உபர், ஓலா வாடகை கார்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் தான், புதிதாக கார் வாங்குவதற்கு முதலீடு செய்யவில்லை. அதனால்தான், நாட்டில் வாகன விற்பனை சரிந்து உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். இதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது மிகவும் சிறந்தது. வாக்காளர்களை குற்றம்சாட்டுங்கள். ஒவ்வொருவரையும் குற்றஞ்சாட்டுங்கள். ஆனால், பொருளாதாரத்தை கையாளுவதோ மத்திய நிதியமைச்சர் தான். மோடிஜியை டிவிட்டரில் பின்தொடருபவர்கள் 5 கோடியை கடந்து விட்டனர். தற்போதுள்ள சூழலில் நாட்டின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர்களை கடக்குமா? ஆனால், அது எப்படி?  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. இதற்கும் நீங்கள் எதிர்க்கட்சிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவீர்களா? உபர், ஓலா அனைத்தையும் அழித்து விட்டதா?’ என்று கூறியுள்ளார்.

சிங்வி தனது அடுத்தடுத்த டிவிட்களில், ‘நல்ல சம்பவங்கள் நடந்தால் அது தங்களால் நடந்தது (மோடினாமிக்ஸ்) , எந்த மோசமான சம்பவம் நடந்தாலும் அது மற்றவர்களால் நடந்தது (நிர்மலானாமிஸ்), மக்கள் எதற்காக உங்களை தேர்ந்தெடுத்தார்கள்? (பப்பிளிகோனாமிக்ஸ்)’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், காங்கிரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,  ‘பஸ், லாரிகள் விற்பனை குறைந்ததற்கு, அதனை அதிகமாக பயன்படுத்திய மக்கள் அதனை வாங்காமல் நிறுத்தியது தான் காரணம் என்று கூறுகிறீர்களா? இது சரியான பதிலில்லை மத்திய நிதியமைச்சர் அவர்களே.
முதலீடுகளை பாதுகாப்போம் என உறுதியளித்து விட்டு அதற்கு மாறாக உங்களது பேரழிவு தரும் கொள்கைகளால் கடந்த 100 நாட்களில் முதலீட்டாளர்களின் ₹12.5 லட்சம் கோடியை அழித்துவிட்டீர்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வரி தீவிரவாதம் உள்ளிட்டவைதான் இதற்கு உண்மையான காரணமாகும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை சிறையில் இருந்தபடி ப.சிதம்பரம் ‘டிவிட்’

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்  தனது கருத்துக்களை தனது குடும்பத்தினர் மூலமாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதன்படி நேற்று அவர் சார்பில் வெளியிடப்பட்ட டிவிட்டர் பதிவில், ‘எனது சார்பாக பின்வரும் கருத்துக்களை டிவிட்டரில் பதிவிடும்படி குடும்பத்தினரை கேட்டுக் கொண்டேன். உங்களது ஆதரவுக்காக அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக நான் சிலரை சந்திப்பதற்கும், அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. நீதி மற்றும் அநீதியை வேறுபடுத்தி பார்த்து புரிந்துகொள்ளும் ஏழைகளின் ஆற்றலை கண்டு வியப்படைகிறேன். நாட்டின் பொருளாதார நிலை மிகுந்த கவலையளிக்கிறது. ஏழைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த வேலைகள், குறைந்த வர்த்தகம் மற்றும் குறைந்த முதலீடு ஆகியவை ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை பாதிப்படைய செய்துள்ளது. இந்த வீழ்ச்சி மற்றும் இருளில் இருந்து நாட்டை மீட்டு எடுப்பதற்கான திட்டம் எங்கே?’ என்று கூறியுள்ளார்.

Tags : Finance Minister ,Cong for Union , People don't buy, bus and truck sales?
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...