துணி ஏற்றுமதி செய்ததாக போலி பில் மூலம் 12.45 கோடி ஊக்கத்தொகை முறைகேடு : சிபிஐ வளையத்திற்குள் சிக்கிய நிறுவனங்கள் அதிர்ச்சி

சென்னை: துணி ஏற்றுமதி செய்யதாக போலி பில் கொடுத்து ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை பெற்று 12.45 கோடி முறைகேடு செய்த வழக்கில் சரக்கு கையாளும் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு  செய்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை வழங்கி  வருகிறது. இந்த ஊக்கத் தொகையை பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்ததாக தூத்துக்குடி துறைமுகத்தில் முறைகேடுகள் நடப்பது சிபிஐக்கு தெரிய வந்தது. இதையடுத்து, சிபிஐ நடத்திய விசாரணையில் திருப்பூர் மற்றும் ஒசூரில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக போலி பில் தயாரித்து அதற்கான ஏற்றுமதி ஊக்கத்தொகையை பெற்றுள்ளதாக தெரியவந்தது. இந்த வகையில் 260 போலி ஏற்றுமதி பில்கள் மூலம் 12 கோடியே 45 லட்சம் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertising
Advertising

இந்த முறைகேடுகளுக்கு சுங்கத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஏற்றுமதி முறைகேட்டில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த வைஷ்ணவி கார்மென்ட்ஸ், ஏ.வி.டெக்ஸ், ஆர்.பி.என்டர்பிரைசஸ், எம்எம்.என்டர்பிரைசஸ், டிஎம்.இம்பெக்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீதும், சென்னையை சேர்ந்த இன்டர்லுக் கார்கோ கிளியரிங் அண்ட் பார்வடிங், ஒசூரை சேர்ந்த பி.பி.டெக்ஸ்டைல்ஸ், எஸ்வி கார்மென்ட்ஸ் மற்றும் மேட்டூரை சேர்ந்த யுஎஸ் குரூப் அண்ட் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பாசேஜ் கார்கோ என்ற நிறுவனத்தை சேர்ந்த பாபு, எஸ்கேஆர் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை சேர்ந்த செல்வகுமார், ஜான் பிரைட் சிஸ்டம் நிறுவனத்தை சேர்ந்த செந்தில் பிரபு, செல்வம் ஆகியோர் இந்த போலி பில்களை துணி நிறுவனங்கள் பெயரில் கொடுத்து முறைகேடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பெரிய முறைகேட்டில் சுங்கத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. பில்கள் பதிவு, ஆய்வு செய்தல் போன்ற பணிகளை செய்யும் சுங்கத்துறை அதிகாரிகள்தான் இந்த முறைகேட்டில் சிக்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் கண்டறியப்படவுள்ளனர்.

அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. தற்போது, போலி பில் கொடுத்து ஏற்றுமதி ஊக்கத்தொகை, சலுகை பெற்ற நிறுவனங்கள், சரக்கு கையாளும் நிறுவனங்கள் மீது மோசடி, கூட்டுச்சதி, லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

Related Stories: