80 லட்சம் ஹவாலா பணம் கொள்ளையடித்த வழக்கில் அடிக்கு பயந்து 2வது மாடியில் இருந்து குதித்து குற்றவாளி தற்கொலை முயற்சி

சென்னை: பாரிமுனையில் 80 லட்சம் ஹவாலா பணம் கொள்ளையடித்த தொடர்பாக போலீசாரின் அடிக்கு பயந்து குற்றவாளி ஒருவன் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் திருவல்லிக்கேணியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் காயல்பட்டினத்தை  சேர்ந்த அபிதீன் (45) என்பவர் ஆன்லைன்  பணம்  பரிமாற்றம் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மேலாளராக முகமது ரிஸ்வான்(35) உள்ளார். இந்த நிறுவனத்தில் அதிகளவில் ஹவாலா பணம் மாற்றப்படுவதால் நிறுவனத்தின் மேலாளரை மிரட்டி பணம் பறிக்கலாம் என்று ஊழியர்களே முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம்  24ம் தேதி முகமது ரிஸ்வான் வீட்டிற்கு சென்று கத்தி முனையில் 80 லட்சம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து மேலாளர் முகமது ரிஸ்வான் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் அபிதீன்னும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்படி போலீசார் 80 லட்சம் ஹவாலா பணத்தை கொள்ளையடித்த ஊழியர்களான பாலாஜி, பிரகாஷ், அஜித், ரஞ்சித், சதிஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹8 லட்சம் பணம், பட்டா கத்தி, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரகுராஜ்(42) என்பவனை வடக்கு கடற்கரை காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையடித்த ஹவாலா பணத்தை திருவல்லிக்கேணி வல்லபாய் அக்ரஹாரம் தெருவில் உள்ள ஷாம் என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அதன்படி போலீசார் குற்றவாளி ரகுராஜை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு திருவல்லிக்கேணிக்கு வந்தனர். ஆனால் ஷாம் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் போலீசார் ரகுராஜை எங்களை ஏமாற்றி இங்கு அழைத்து வந்தாயா என்று அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குற்றவாளி ரகுராஜ் போலீசார் தன்னை அடித்தே கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் ரகுராஜ் உடல் முழுவதும் எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். உடனே போலீசார் ரகுராஜை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குற்றவாளி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜாம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்து வந்த குற்றவாளி ஒருவன் போலீசாரின் அடிக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: