ஒகேனக்கல் காவிரியில் வெள்ளம் தடைமீறி ஓட்டிய பரிசல் கவிழ்ந்தது பெண் அடித்து செல்லப்பட்டார்

பென்னாகரம்:  தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக உள்ளதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்தவரும், தற்போது பிரான்சில் வசித்து வருபவருமான மனோ மற்றும் இவரது மனைவி அஞ்சலாட்சி (51), மகள் மோஷிகா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் காரில் ஒகேனக்கல் வந்துள்ளனர். அங்கு தங்கிய அவர்கள் நேற்று காலை பரிசலில் செல்ல விரும்பினர். தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் பரிசல் இயக்க முன்வரவில்லை. ஆனால் ஒகேனக்கல் ஊட்ட மலையை சேர்ந்த பரிசல் ஓட்டி மனோகரன் (37) என்பவர் மனோ, அஞ்சலாட்சி, மோஷிகா, இவர்களது கார் டிரைவர் கந்தன் ஆகியோரை தனது பரிசலில் கூட்டிச்சென்றார். ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் பரிசல் திடீரென கவிழ்ந்தது. இதில் பரிசலில் இருந்த அஞ்சலாட்சி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். மனோ, அவரது மகள் மோஷிகா, கார் டிரைவர் கந்தன் ஆகியோர் மரக்கிளைகளை பிடித்து ஆற்றில் தத்தளித்த நிலையில் அபய குரல் எழுப்பினர். அவர்களை பரிசல் ஓட்டி மனோகரன்,  மீட்டு கரை சேர்த்தார். பரிசல் ஓட்டி மனோகரனை கைது செய்த போலீசார் அஞ்சலாட்சியை தேடி வருகின்றனர்.

கரூர் காவிரியாற்றில் மூழ்கி வங்கி ஊழியர் பலி: கரூர் தாந்தோணிமலையை சேர்ந்தவர் சின்னையன். இவர், கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத்தலைவராக உள்ளார். இவரது மகன் சூர்யபிரகதீஸ்(23). ராயனூரில் உள்ள பல்லவன் வங்கியில் பணியாற்றி வந்தார். தாந்தோணிமலை கணபதிபாளையத்தை சேர்ந்த சக்திவேலின் மகன் கார்த்திக்ராஜா (19). இவர், ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு பயின்று வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் அக்பர்உசேன். இவரும் கல்லூரி மாணவர் ஆவார். நண்பர்கள் மூவரும் நேற்று கரூர் அருகே நெரூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். இவர்களில் சூர்யபிரகதீஸ், கார்த்திக்ராஜா ஆகியோர் மட்டும் குளித்தனர். அக்பர், அருகில் உள்ள கடைக்கு ஷாம்பு வாங்க சென்றார். சில நிமிடத்துக்குபின் அக்பர் வந்து பார்த்தபோது 2 பேரையும் காணவில்லை. அவரது கூச்சலை கேட்டு பொதுமக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தேடி பார்த்தனர்.  இவர்களில் சூர்யபிரகதீஸின் உடலை மீட்டனர். மாயமான கார்த்திக்ராஜாவை தேடி வருகின்றனர்.

Related Stories: