தண்டராம்பட்டு அருகே ஒரே கிராமத்தில் 3 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

தண்டராம்பட்டு:  தண்டராம்பட்டு அருகே சே.ஆண்டாப்பட்டு கிராமத்தில் ஒரே நாளில் நடக்கவிருந்த 3 சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்தினர். திருவண்ணாமலை அடுத்த சே.ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்(26), மேஸ்திரி. ரவிக்குமார்(25), கர்நாடகாவில் செருப்பு விற்பனை கடை நடத்தி வருகிறார். விஜி(24), கூலித்தொழிலாளி. இவர்கள் 3 பேருக்கும் பெற்றோர் ஏற்பாட்டின்பேரில் நேற்று காலை தனித்தனியாக திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி கிராமமே விழாக்கோலமாக காட்சியளித்தது.

இந்நிலையில், சதீஷ்குமார் உள்ளிட்ட 3 பேருக்கும் திருமண ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சமூக நலத்துறை, சைல்ட் லைன் மற்றும் செங்கம் மகளிர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, சே.ஆண்டாப்பட்டு கிராமத்திற்கு சென்றனர். தொடர்ந்து, திருமணம் நடைபெற இருந்த மணமகன் இல்லங்களுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், சதீஷ்குமார் உள்ளிட்ட 3 பேருக்கும், 18 வயது பூர்த்தியடையாத சிறுமிகளுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என எச்சரித்த அதிகாரிகள், திருமணத்ைத தடுத்து நிறுத்தினர். 3 சிறுமிகள் மற்றும் அவரது பெற்றோரை செங்கம் காவல்நிலையம் அழைத்து சென்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சே.ஆண்டாப்பட்டு கிராமத்தில் ஒரே நாளில் 3 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: