மேட்டூர் சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளியை தப்ப விட்ட 3 எஸ்.பி உட்பட 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை : உள்துறை செயலாளருக்கு அரசு வக்கீல் கடிதம்

சேலம்: சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளியை தப்பிக்கவிட்டது தொடர்பாக 3 எஸ்பிக்கள் உட்பட 8 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை செயலாளருக்கு அரசு வக்கீல் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2009ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற ராணி என்ற பெண், சென்னையில் டாக்டர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு வந்தார். பின்னர் 20நாட்கள் கழித்து அந்த சிறுமி ஊர் திரும்பினார். அப்போது தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவலை கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டூர் போலீசார் ராணியை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராணிக்கு 10ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பு கூறினார். அதேநேரத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்யாமல் விட்டு விட்டதாகவும் தனது தீர்ப்பில்  எழுதி இருந்தார். இந்நிலையில், சேலம் மாவட்ட அரசு வழக்கறிஞர் தனசேகரன் அரசு உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான டாக்டரை போலீஸ் அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் அவரை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தவில்லை. இந்த வழக்கு 2009 முதல் 2013 வரை நடந்துள்ளது. இந்த கால கட்டத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் வழக்கை விசாரித்துள்ளனர். 3 டிஎஸ்பிக்கள், 3 எஸ்பிக்கள் இந்த வழக்கை கண்காணிக்கத் தவறியுள்ளனர். இந்த வழக்கை பதிவு செய்யும்போது இருந்த ஒரு எஸ்பி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதும் பணியில் இருந்துள்ளார். சிறுமிகள் மீதான குற்றச்செயல்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டங்கள் கூறுகிறது. ஆனால், இந்த 8 அதிகாரிகளும் அதனை செய்யவில்லை. அதேநிலையில் முக்கிய குற்றவாளியை கைது செய்யாமலும் சட்டத்தின் முன் நிறுத்தாமலும் விட்டதற்கான காரணம் தெரியவில்லை. எனவே, இந்த வழக்கில் இவர்கள் அனைவரும் முறையாக விசாரணை நடத்தவில்லை. குற்றவாளி தப்பிப்பதற்கு இவர்கள் காரணமாக  இருந்துள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: