பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு கொள்முதல் விலை உயர்வு கோரி 24, 25ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ‘‘பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி வரும் 24, 25ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பால்  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பாக கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று பால் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் முனுசாமி அறிவித்தார். தமிழ்நாடு  பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முனுசாமி நேற்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2014ம் ஆண்டு பால்  கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நான்கரை ஆண்டாக உயர்த்தவில்லை.  நாங்கள் எருமை பாலுக்கு ரூ.50, பசும்பால் ரூ.40 என உயர்த்த கோரினோம். ஆனால்  தற்போது எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தி ₹41 ஆக தரப்படுகிறது.  பசும்பால் ரூ.3 உயர்த்தி ₹32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஏமாற்றமளிக்கிறது.

பால்  சொசைட்டிகளுக்கு உற்பத்தியாளர்கள் பால் ஊற்றும்போது பாலின் அளவு, தரம்  உள்ளிட்டவைகளை கணக்கிட்டு பணம் கொடுக்கப்பட வேண்டும். இதேபோல  சம்பந்தப்பட்ட சொசைட்டியில் இருந்து பால் குளிரூட்டும் இணையத்திற்கு கொண்டு  சென்று தரம் சோதிப்பது வழக்கம். ஆனால் ஆவின் நிர்வாகத்துக்கு சென்றபின் அல்லது சென்னைக்கு சென்றபின் எவ்வளவு பால்  கொள்முதல், எஸ்.என்.எப். கொழுப்பு அளவை தருகின்றனர். இதுபோன்ற நடைமுறை  பின்பற்றக்கூடாது என கோர்ட் உத்தரவிட்டும் நடைமுறைப்படுத்தாமல்  உள்ளது. எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி  வரும் 24, 25ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பால்  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பாக கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 26ம் தேதி அந்தந்த கூட்டுறவு ஒன்றியங்கள்  முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இவ்வாறு முனுசாமி கூறினார்.

Related Stories: