திருவளர்சோலை, பனையபுரத்தில் வயல்களில் காவிரி நீர் புகுந்து 1 லட்சம் வாழைகள் சேதம் : விவசாயிகள் வேதனை

திருவெறும்பூர்: காவிரி ஆற்றில் வெள்ளம் வந்ததால் திருவளர்சோலை, பனையபுரத்தில் நீர் புகுந்து ஒரு லட்சம் வாழைகள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை நிரம்பியில் இருந்து 65,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.. இந்த தண்ணீர் மேட்டூரில் இருந்து அப்படியே காவிரியில் திறக்கப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரியில் 39,368 கனஅடியும், கொள்ளிடத்தில் 31,852 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரைபுரண்டோடுகிறது.

காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ரங்கம் நாட்டு வாய்க்காலிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி நீர் புகுந்ததால் ரங்கம் நாட்டுவாய்க்கால்-காவிரிக்கு நடுவில் திருவளர்ச்சோலை, பனையபுரம் பகுதியில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

காவிரியில் 39,368 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் சுமார் 3 அடி உயரத்துக்கு வாழை பயிர்கள் மூழ்கியது. இந்த பகுதிகளில் 10 மாதம் கொண்ட நேந்திரம் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. 4 மாத பருவத்தில் வாழைகள் வளர்ந்துள்ளது. பூவன், ரஸ்தாளி வாழைகள் ஒரு வாரம் தண்ணீர் தேங்கியிருந்தாலும் தாக்கு பிடிக்கும். ஆனால் நேந்திரம் வாழைகள் 4 நாள் தண்ணீர் தேங்கினாலே தாக்கு பிடிக்க முடியாமல் வேர் அழுகிவிடும்.

கடந்தாண்டு வெள்ளத்தின்போது இந்த பகுதியில் கரும்பு, வாழை, நெற்பயிர்கள் மூழ்கி கடும் சேதம் ஏற்பட்டது. வெள்ளக்காலங்களில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்தால் முக்கொம்பு அணையிலே கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீர் திறக்க வேண்டும். அப்படி திறந்தால் இங்கு பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். அவ்வாறு செய்யாமல் முக்கொம்பில் இருந்து காவிரியில் அதிகமான தண்ணீர் திறப்பதால் திருவளர்சோலை, பனையபுரம், கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பயிர்கள் பாதிக்கப்பட்டு பெருநஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவளர்சோலை விவசாயிகள் கூறுகையில், ‘‘வெள்ளக்காலங்களில் முக்கொம்பு அணையிலிருந்தே கொள்ளிடத்தில் அதிக தண்ணீர் திறந்தால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாது. தற்போது ஒரு லட்சம் வாழைகள் நீரில் மூழ்கியுள்ளது. பல ஆயிரம் செலவு செய்து வாழைகள் நடவு ெசய்தோம். அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லை. அதற்குள் வாழைகள் அழுகிவிடும். எனவே இதை தடுக்க வேண்டும். இல்லை என்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் ’’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: