செப்டம்பர் 11ம்தேதியா, 12ம் தேதியா? 6 ஆண்டாக தொடரும் பாரதி நினைவு தின குழப்பம் : பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு அறிவிக்க வேண்டும்

எட்டயபுரம்: பாரதியார் நினைவு தின தேதி மாற்றம் குறித்து விபரம் மக்களை சென்றடையாததால் தினத்தை அனுசரிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவதுடன், நாள்காட்டியில் சரியான தேதியை குறிப்பிட உத்தரவிட வேண்டும். மகாகவி பாரதியார் 1921 செப்டம்பர் 11ம்தேதி சென்னையில் இறந்தார். அன்று முதல் செப்.11ம் தேதி பாரதியின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எட்டயபுரத்தில் உள்ள பாரதி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாணவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் பாரதி அன்பர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாரதியார் செப்.11ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் இறந்தார் என தெரியவந்ததையடுத்து கடந்த 2014ம் ஆண்டு அரசு பாரதியின் நினைவு நாள் செப்.12 எனவும் அன்றே அவரது நினைவு தினத்தை அனுசரிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி எட்டயபுரம் மணிமண்டப கல்வெட்டிலும் செப்.12 என திருத்தப்பட்டது.

இது அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் அவரது நினைவு தினம் தமிழகத்தில் செப்.11ம்தேதியே அனுசரிக்கப்படுகிறது. பாரதியின் நினைவு தின மாற்றத்தை செய்தி மக்கள் தொடர்பு துறையினர் எட்டயபுரம் மணிமண்டப கல்வெட்டில் மட்டுமே மாற்றம் செய்தனர். அதோடு அன்றைய நாளிதழ்களில் செய்தி வெளியானதோடு சரி. அதன்பின் தேதி மாற்றம் குறித்து பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரியபடுத்தியதாக தெரியவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக தினசரி காலண்டர்களிலும் பாரதியின் நினைவு தினம் செப்.11 என்றே உள்ளது. மக்கள் ஒருவரையொருவர் சந்தித்தால் மட்டுமே தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்ற நிலையில் தொலை தொடர்பு சாதனங்கள் இல்லாத காலத்திலேயே பிரெஞ்சு புரட்சியையும் ரஷ்ய புரட்சியையும் வாழ்த்தி பாடி வரவேற்றவன் பாரதி. காசிநகர் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்ற பாரதியின் தொலைநோக்கு பார்வைக்கு கருப்பு வண்ணம் தீட்டுவது போல் அவருடைய நினைவு தினம் மாற்றம் செய்யப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் பாரதியின் நினைவு தினம் காலண்டரில் முந்தைய தேதியாகவே வெளியிடப்படுகிறது.

எனவே  தமிழக அரசு பாரதியின் நினைவு தினம் மாற்றம் குறித்து முறைப்படி அறிவிப்பு செய்வதோடு தினசரி நாள்காட்டிகளிலும் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், பள்ளி, கல்லூரிகளுக்கு இதுகுறித்த அறிவிப்பை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: