நகை பறித்த கொள்ளையனை மடக்கி பிடித்த தாய், மகன்

சூலூர்:  சூலூர் ரங்கநாதபுரம் நெய்தல் வீதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் விசேஷங்களுக்கு டெண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அஜு(45). இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டின் முன்பு சாணம் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து 2 பேர் வந்துள்ளனர். பைக்கின் பின்னால் இருந்தவன் கீழே இறங்கி அஜு விடம் கலங்கல் செல்லும் சாலை எது? என கேட்டுள்ளான். அதற்கு பதில் கூறிய பின்னும் செல்லாமல் சந்தேகப்படும்படியாக அவன் நின்று கொண்டே இருந்துள்ளான்.

இதை தொடர்ந்து சந்தேகமடைந்த அஜு வீட்டு காலிங் பெல்லை அடித்துள்ளார். சத்தம் கேட்ட அவரது மகன் கிஷோர் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வர, அங்கு நின்று கொண்டுருந்தவன் திடீரென அஜுவின் கழுத்திலிருந்த நகையைப் பறிக்க முயன்றுள்ளான். அஜு நகையை பறிக்க முயன்றவனின் கையைப் பிடிக்கவே உடனே அவன் அஜுவின் கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளான். அதற்குள் வீட்டிற்குள்ளிருந்த கிஷோர் ஓடிவந்து அவனுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்டு திருடனை மடக்கி பிடித்தார். இதை கண்டு உடன் வந்த திருடன் பைக்கில் தப்பி சென்று விட்டான். பின்னர் பொதுமக்கள் திரண்டு வந்து சிக்கியவனை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து அவனை சூலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன் சூலூரில் பூப்பறித்துக் கொண்டிருந்த நாகவள்ளி என்பவரிடம் 7 பவுன் செயின் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதேபோல் பலரிடம் கைவரிசை காட்டியிருக்கலாம் என்பதால் அவனிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: