நதிக்கரை தூய்மை திட்டத்தில் நொய்யல் ஆற்றுக்கு நிதி நிராகரிப்பு

கோவை: கோவை செம்மேட்டில் கூடுதுறையில் துவங்கும் நொய்யல் ஆறு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக பாய்கிறது. ஈரோடு மாவட்ட எல்லையில் கொடுமுடி காவிரியில் கலக்கும் நொய்யல் ஆறு 109 கி.மீ தூரம் அமைந்துள்ளது. புராதன பெருமை பெற்ற நொய்யல் ஆற்றை மத்திய அரசின் தூய்மை திட்டத்தில் சீரமைக்க நிதி எதிர்பார்க்கப்பட்டிருந்தது. குறிப்பாக வைகை, காவிரி, நொய்யல், தாமிரபரணி, தென்பெண்ணை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் கழிவுகளை அகற்ற தூய்மை இந்தியா திட்டத்தில் நிதி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு நொய்யல் ஆற்றுக்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்தில் வைகை ஆறு மட்டும் தூய்மை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. காவிரி, பவானி, நொய்யல் ஆறு சீர் செய்ய முடியாத அளவில் பாழாகி விட்டதாக கூறி இந்த திட்டத்தில் நிதி ஒதுக்காமல் விட்டு விட்டதாக தெரிகிறது.

பவானி, நொய்யல், அமராவதி ஆறுகள் காவிரியில் கலக்கிறது. தோல், சாயம், உள்ளாட்சி கழிவுகள், பவுண்டரி உட்பட பல்வேறு நிறுவனங்களில் மொத்த கழிவுகளால் காவிரியின் கிளை நதிகள் பெருமளவில் மாசடைந்துள்ளது. தூய்மை திட்டத்தில் முக்கிய ஆறுகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கினாலும் அந்த நதிகள் கழிவுகளால் நாசமான நிலையில் தான் இருக்கிறது. நிதி ஒதுக்காமல் சீரமைப்பிற்கான எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் நொய்யல் ஆறு நிராகரிக்கப்பட்டது பொதுமக்கள், விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: