பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை : மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

பரமக்குடி: தியாகி இமானுவேல்சேகரன் 62வது நினைவு தினம் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரனின் 62வது நினைவு தினம் மற்றும் குருபூஜை நேற்று நடந்தது. இதையொட்டி பரமக்குடி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். எம்பி கனிமொழி, திமுக பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உட்பட பலரும் மலரஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி ஆகியோரும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் பரமக்குடி எம்எல்ஏ சதன்பிரபாகர், முன்னாள் எம்.பி அன்வர்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காங்கிரஸ், அமமுக, தேமுதிக, பாஜ, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்பின் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மாலை வரை முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக காலை 7 மணியளவில், அவரது சொந்த ஊரான செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்களும் அதைதொடர்ந்து இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபாராணி, பேரன்கள் ரமேஷ்குமார், கோமகன், இளவரசன், சக்கரவர்த்தி மற்றும் மருமகள் வள்ளி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மோடி அரசின் 100 நாள் சாதனை என்ன?

இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என போராடியவர்  தியாகி இமானுவேல்சேகரன். கடந்த 1950ம் ஆண்டு முதலே தீண்டாமை ஒழிப்புக்காக  போராடி வந்தார். காமராஜருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளார். இமானுவேல் சேகரன் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க  வேண்டியது ஆளுங்கட்சியினர்தான். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக  குறைந்துள்ளதுதான் பிரதமர் மோடியின் 100 நாள் சாதனையாக உள்ளது’’ என்றார்.

Related Stories: