போக்குவரத்து விதிமீறலுக்கு மத்திய அரசு விதித்த அபராதத்தை மாநிலங்கள் குறைக்கலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

மும்பை: போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிக்கப்படும் அபராத தொகையை குறைத்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளதாக மத்திய  போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்ட மசோதா கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 முதல்  95,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வளவு அதிகமாக அபராதம் விதிக்கும் இந்த புதிய சட்டத்துக்கு பல மாநில அரசுகள், குறிப்பாக பாஜ ஆட்சியில் இல்லாத மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இந்த  அபராத சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.

அதேவேளையில், மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அங்கு புதிய மோட்டார் வாகனச் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பாஜ ஆளும் குஜராத்தில் இந்த அபராதத் தொகை ஒவ்வொன்றையும்  பாதியாக குறைக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, ஹெல்மெட் இன்றி மோட்டார் சைக்கில் ஓட்டினால் விதிக்கப்படும் ரூ.1000 அபராதத்தை, ரூ.500 ஆக குறைத்துள்ளது. கேரள மாநில அரசும், அபராத தொகையை  கணிசமாக குறைக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், பாஜ ஆளும் குஜராத்தில் அபராத தொகை குறைக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: புதிய மோட்டார் வாகன சட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த  வேண்டும். அபராதத் தொகையை குறைக்க நினைக்கும் மாநில அரசுகளை அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த ஓராண்டில் மட்டும் சாலை விபத்துகளில் ஒன்றரை லட்சம் பேர் வரை இறந்திருக்கிறார்கள். இந்த உயிர்  பலிகள் குறித்து  நாம் கவலைப்பட வேண்டாமா?. சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கத்துடன்தான் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமல்ல.  சாலை விபத்துக்களை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டம். சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். இது நாட்டுக்கு நல்லது அல்ல. உயிர்களை காப்பாற்றுவதற்காகத்தான் சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறதே  தவிர வருவாய் ஈட்டுவதற்காக அல்ல என்பதை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளையில், அபராத தொகையை குறைத்துக் கொள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது. 30 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமீறல்களுக்கான  அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

‘தமிழகத்தில் விபத்து 28% குறைந்தது’

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த பாஜ ஆளும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு மட்டும் இதை படுதீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இது பற்றி தனது  பேட்டியில் நிதின் கட்கரி கூறுகையில், ‘‘தமிழகத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு விபத்துகளின் எண்ணிக்கை 28 சதவீதம் குறைந்திருக்கிறது. இதில் இருந்து அனைத்து  மாநில அரசுகளும் பாடம் கற்றுக் கொள்ள  வேண்டும்,’’ என்றார்.

லுங்கி அணிந்தால் 2,000

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, டிரைவர்கள் பேன்ட், டிசர்ட் அல்லது சட்டை, காலில் ஷூ அணிந்து கொண்டும்தான் வாகனத்தை ஓட்ட வேண்டும்.  லுங்கி அணிந்தால் ₹2,000 வரை அபராதம் விதிக்கலாம். இதை கட்டாயமாக்க யோகி  ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

அமல்படுத்த மம்தா மறுப்பு

பல மாநிலங்கள் அபராதங்களை குறைத்து வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் அடியோடு நிராகரித்து விட்டது. ‘இப்போதுள்ள அபராதத்தை தான் பின்பற்றுவோம்; மத்திய அரசு ஏற்றிய அபராத கட்டணத்தை அமல்படுத்த மாட்டோம்’ என்று  முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

ராஜஸ்தான் டிரைவருக்கு 1.41 லட்சம் அபராதம்

நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்து கதற விட்டுள்ளனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அபராதத் தொகை  உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வீட்டு முன்பாக இளைஞர் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: