நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்-லின் 13,000 தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்-லின் 13,000 தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பாலும் ஊரகங்களில் உள்ள தொலைபேசி இணைப்பகங்களை மூடுவதால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ரூ.3000 கோடி மிச்சமாகும் என்று விளக்கமளித்துள்ளது.

கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தத்தளித்து வருவதும், போதுமான செயல்பாட்டு மூலதனம் இன்மையால் பல இடங்களில் தனது சேவையை சரிவர வழங்க முடியாமல் தவித்து வரும் நிலையில், செலவை மிச்சப்படுத்த குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க உள்ளதாகவும் கூறி வந்தது.

பிஎஸ்என்எல் நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க இயலாத அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நிறுவனத்தை தொடர்ந்து இயக்க 13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் பிஎஸ்என்எல் கோரிக்கை வைத்துள்ளது.

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களின் கடும் போட்டியால் லாபமீட்ட முடியாமல் தடுமாறி வருகிறது. தனியார் நிறுவனங்கள் 2 ஆண்டுக்கு முன்பே 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி, தற்போது 5ஜி சேவையைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனமோ இன்னமும் 3ஜி சேவையைத்தான் கொடுத்து வருகிறது. 2004-05க்குப் பிறகு இதுவரையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் சந்தைப் பங்கு 10 சதவிகிதம் குறைந்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 2018-19 நிதியாண்டு கணக்கின்படி 14 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடனிலிருந்தும், வருவாய் இழப்பிலிருந்தும் பிஎஸ்என்எல்-ஐ மீட்க மத்திய அரசு இதுவரையில் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதிக ஊதியம் வழங்க வேண்டியிருப்பது, மோசமான மேலாண்மை செயல்பாடு, நவீனமயமாக்கலில் பின் தங்கியிருப்பது போன்றவை இந்நிறுவனத்தின் இயக்கத்தை கூடுதல் சுமையாக்கியுள்ளது.

Related Stories: