ஆவின் சேர்மன் பதவிக்கு 2 அமைச்சர்கள் போட்டா போட்டி

மதுரை: மதுரை ஆவின் சேர்மன் பதவியை, தங்களது ஆதரவாளர்களுக்கு பெற்றுத் தர அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி.உதயகுமார் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஆவின் மதுரை, தேனி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. கடந்த கூட்டுறவு தேர்தலில் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ஆதரவாளருக்கு ஆவின் சேர்மன் பதவியை பெற்று தந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பின்னர் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், தனது தம்பி ஓ.ராஜாவை சேர்மனாக்கினார். இதனால், அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆதரவாளரான தங்கராஜூ துணைத் தலைவரானார். இந்நிலையில், மதுரை ஆவின் நிர்வாகம் மதுரை, தேனி என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. தேனி மாவட்ட ஆவின் சேர்மனாக ஓ.ராஜா நியமிக்கப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை ஆவின் துணைத் தலைவராக உள்ள தங்கராஜ், மதுரை மாவட்ட ஆவினுக்கு தற்காலிக சேர்மனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertising
Advertising

ஆனால், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் இடைக்கால தலைவராக கடந்த மாதம் 29ம் தேதி பதவி ஏற்றார். இது அமைச்சர் செல்லூர் ராஜூ தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்கள், ஐகோர்ட் கிளையில் மனு செய்து, தற்காலிக தலைவர் செயல்பட தடை உத்தரவு பெற்றனர். ஆவினில் ஏற்கனவே இருந்த 17 இயக்குநர்களில் 6 பேர் தேனி மாவட்டத்திற்கு இயக்குநர்கள் சென்று விட்டனர். தற்போது 11 பேர் மட்டுமே மதுரை ஆவினில் இயக்குநர்களாக உள்ளனர். ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுரை ஆவினுக்கு இன்னும் 6 இயக்குநர்கள் மதுரை மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அதன் பிறகு சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெறும்,’ என்றார்.

அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஆவின் சேர்மன் பதவியை யாரும் எதிர்பார்க்காத வகையில், அமைச்சர் உதயகுமார் ஆதரவாளர் கைப்பற்றினார். அவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள தீவிர முயற்சியில் உள்ளார். தனது ஆதரவாளருக்கு இம்முறை சேர்மன் பதவியை பெற்றுத் தர வேண்டும் என்ற முனைப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிரமாக உள்ளார். இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த பதவியை தங்களது ஆதரவாளர்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்று 2 அமைச்சர்களும் போராடி வருகின்றனர்,’’ என்றனர்.

Related Stories: