கன்னியாகுமரியில் பைக்குடன் 25 அடி பள்ளத்துக்குள் விழுந்து வாலிபர் பரிதாப சாவு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நள்ளிரவில் 25 அடி பள்ளத்துக்குள் பைக்குடன் விழுந்து வாலிபர் உயிரிழந்தார். அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி சிலுவை நகர் கடற்கரை பாலத்துக்கு செல்லும் வகையில் சுமார் 25 அடி பள்ளத்தில் வாலிபர் ஒரவரது சடலம் கிடந்தது. அவருக்கு சுமார் 25 ல் இருந்து 28 வயதுக்குள் இருக்கும். சடலத்துக்கு அருகில் ஒரு பைக்கும் கிடந்தது. எனவே வாலிபர் பைக்குடன் விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து அந்த வழியாக சென்ற சிலர் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து கயிறு மூலம் சடலத்ைத மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த வாலிபர் அருகில் செல்போன் ஒன்றும் உடைந்த நிலையில் கிடந்தது. அந்த செல்போனை சரி செய்தனர்.

பின்னர் அதில் உள்ள நம்பர் மூலம் இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். நேற்று இரவு இந்த வாலிபர் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் யாரும் கவனிக்க வில்லை. விடிய விடிய உயிருக்கு போராடி அந்த வாலிபர் இறந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி கன்னியாகுமரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: