வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பகல் அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. முக்கியமாக நீலகிரி மாவட்டம் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு குறைய தொடங்கிய மழை தற்போது மீண்டும் பெய்து வருகிறது. டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடலோரப் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, புதுச்சேரி ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று அதிகாலையில் கோயம்பேடு, வளசரவாக்கம், வடபழனி, மதுரவாயல், கிண்டி போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென லேசான மழை பெய்தது. மேலும் இன்று பகல் அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Weather Center , Rain, Weather Center
× RELATED டெல்டா மற்றும் தென் கடலோர...