சென்னை தலைமை செயலகத்தில் திடீரென நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு: பெண் போலீசார் அலறி அடித்து ஓட்டம்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் திடீரென நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, தலைமை செயலக வளாகத்துக்குள் அடிக்கடி பாம்புகள் வருவதுண்டு. தலைமை செயலகத்தை சுற்றிலும் நிறைய மரங்கள், புதர்கள் உள்ளதால் இப்படி பாம்புகள் அடிக்கடி படையெடுத்து வருவது வாடிக்கையாகி விட்டதாக கூறப்படுகிறது. பாம்புகள் தலைமைச்செயலகத்தில் நுழைந்து விடுவதால் தலைமை செயலக ஊழியர்களிடையே அடிக்கடி பரபரப்பும், பீதியும் ஏற்பட்டு விடும். அந்தவகையில், இன்று தலைமை செயலக வளாகத்தின் 4வது வாயில் வழியாக தலைமைச்செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் படமெடுத்தபடி ஒரு நல்ல பாம்பு இருந்துள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கக்கூடிய தலைமை செயலகத்தில் இன்று அரசு விடுமுறை என்ற காரணத்தால் பெருமளவு அதிகாரிகள் இல்லை.

ஆனால், அங்கு சில அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது படுமெடுத்துக்கொண்டிருந்த பாம்பை கண்ட பெண் போலீசார், தலைதெறிக்க ஓடினார்கள். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த நல்ல பாம்பு அங்குள்ள புதருக்குள் நுழைந்துவிட்டதால், அதனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக இறங்கினர். கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த பாம்பினை வீரர்கள் பிடித்து கொண்டு சென்றனர். இதன் பின்னரே, அங்கு பரபரப்பு சூழல் தணிந்து இயல்பு நிலை திரும்பியது.

Related Stories: