காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் குறைந்த மழை..: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 53,000 கன அடியாக குறைப்பு

பெங்களூரூ: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணையில்(கே.ஆர்.எஸ்) மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டின. கே.ஆர்.எஸ் அணைக்கு வினாடிக்கு 41,000 கன அடி வீதமும், கபினி அணைக்கு நொடிக்கு 17,000 கன அடி வீதமும் நீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. எனவே, காலை 9 மணி நிலவரப்படி, கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 38,600 கன அடி வீதமும், கபினியில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக வினாடிக்கு 53,600 கன அடி வீதம் காவிரியில் நீர் பாய்கிறது.

Advertising
Advertising

ஏற்கனவே, திறக்கப்பட்டதையும் சேர்த்து தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 70,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. ஒகேனக்கலிலும் அதே அளவு நீர்வரத்து இருப்பதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கலில் தொடர்ந்து 6வது நாளாக பரிசல்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுா பயணிகள் குளிக்க 36வது நாளாக தடை தொடர்கிறது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 68,000 கன அடியாக நீர்வரத்து உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 65,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாயில் இருந்து வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.74 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 94.65 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: