அணு உலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட கதிரியியக்கம் கொண்ட நீரை பசிபிக் பெருங்கடலில் கொட்டலாம்: ஜப்பான் மந்திரி பரிந்துரை

டோக்கியோ: அணு உலை வெடிப்பின் போது கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நீரை பசிபிக் கடலில் கொட்ட ஜப்பான் சுற்றுச்சூழல் மந்திரி பரிந்துரை செய்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ரிக்டரில் 9 என்ற அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக 15 மீட்டர் உயரம் கொண்ட ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை வலுவாக தாக்கியது.

இதனால் அங்குள்ள புகுஷிமா அணு உலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அங்குள்ள மூன்று உலைகளின் குளிரூட்டும் அமைப்பு சேதமடைந்தன. இதனால் அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளியாகி காற்றில் கலந்தது. மேலும் அணு உலையை குளிரூட்ட பயன்படும் தண்ணீரில் கதிரியியக்கம் கலந்துவிட்டன. இதனால் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நீரை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக ஜப்பான் அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஜப்பான் சுற்றுச்சூழல் மந்திரி யோஷியாகி ஹராடா கதிரியக்கம் கொண்ட நீரை பசிபிக் பெருங்கடலில் கொட்டலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கதிரியக்க நீரை பசிபிக் கடலில் கலந்து நீர்த்து போகச் செய்வதே நமக்கு இருக்கும் ஒரே வழியாகும். இது எனது தனிப்பட்ட கருத்து எனவே இது குறித்து அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கும் என்று ஜப்பான் சுற்றுச்சூழல் மந்திரி குறிப்பிட்டுள்ளார். ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான அளவில் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நீர் இருப்பதாக சொல்லப்படுகிறது. பசிபிக் கடலில் கதிரியக்க நீரை கலக்கலாம் என்ற ஜப்பான் மந்திரியின் கருத்து உள்ளூர் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: