காட்பாடி ரயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்

வேலூர்:  வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரயில் (எண்-13005) காட்பாடி ரயில் நிலையம் நோக்கி நேற்று காலை வந்து கொண்டிருந்தது. காலை 8.20 மணியளவில் காட்பாடி ரயில்  நிலையத்தை வந்தடைய வேண்டிய ரயில் 8.12 மணியளவில் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டையில் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரமாகியும் ரயில் இயக்கப்படாததால், பயணிகள் சிலர் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது, அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயில் நின்று கொண்டிருந்தது. ஒரே தண்டவாளத்தில் அருகருகே 2 ரயில்கள் இருப்பதை பார்த்த பயணிகளில்  சிலர் எதிர் திசையில் மற்றொரு ரயில் வருவதாக கூச்சலிட்டபடியே ஓடினர். இதனால், ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே குதித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆனால், அதே தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலும் இயக்கப்படாமல் நிறுத்தியிருந்ததால் சிறிது நேரத்தில் பயணிகள் அமைதியானார்கள். இதற்கிடையில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் எதிரெதிரே வந்துவிட்டது. அந்த ரயில்கள் 100  மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில நிமிடங்களில் தகவல் வைரலானது.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் எதிரெதிரே ரயில்கள் வரவில்லை. சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தனர். அதன்பின்  பயணிகள் நிம்மதியடைந்தனர். இதையடுத்து ஜோலார்பேட்டை- அரக்கோணம் மின்சார ரயில் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல், குறிப்பிட்ட நேரம் வரை காட்பாடி ரயில் நிலையம் வழியாக சென்ற சில ரயில்கள் 20  நிமிடங்கள் வரை தாமதமாக சென்றது.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் ஏற்றிக்கொண்டு  காலை 6.30 மணியளவில் வேகன் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. அதே தண்டவாளத்தில் ஜோலார்பேட்டை-அரக்கோணம் மின்சார  ரயில் சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில், வாலாஜா அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் காட்பாடி அருகே அடுத்தடுத்து 100 மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், குடிநீர் ஏற்றி வந்த வேகன் ரயிலுக்கு சென்னை வில்லிவாக்கத்தில் தண்டவாள பாதையை மாற்ற முடியாது என்பதால், இருபுறமும் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. குடிநீர் ஏற்றிச் சென்ற வேகன் ரயிலுக்கு பின்பக்கமாக  பொருத்தப்பட்டிருந்த இன்ஜினை பார்த்த பயணிகள் நேருக்கு நேர் ரயில்கள் வந்திருப்பதாக நினைத்து அச்சப்பட்டுள்ளனர். இந்த பிரச்னைக்கு சிக்னல் கோளாறு மட்டுமே காரணம்’ என்றனர். இச்சம்பவம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: